பஞ்சமி நிலங்கள் / தலித் உரிமை களத்தின் ‘நிஜ அசுரன்’.!
தற்போது இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் “அசுரன்” திரைப்படம் பஞ்சமி நிலங்கள் குறித்து சில இடங்களில் பேசுவதாகவும்,அதன் தாக்கத்தால் சமூக வலைத்தளங்களில் பஞ்சமி நிலம் வரலாறு,பஞ்சமி நிலத்தின் தற்போதைய நிலைமை குறித்து விவாதம் நடந்து கொண்டிருக்கிறது…
இந்திய சாதிய கட்டமைப்பில் விளிம்புநிலை மக்களுக்கு ஏன் நிலங்கள் வழங்க வேண்டும் என்று பஞ்சமி நிலங்களின் “X-Factor”ஆக விளங்கிய ஜெ.எச்.ஏ.திரமென்ஹீர் அவர்கள் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக இருந்த போது,பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் அளித்த சென்னேரி பறையர் இன மக்களின் நிலை குறித்த அறிக்கையில் (Notes On Pariah) குறிப்பிட்டு இருந்தது…
‘’கணத்த இதயத்துடன் இதை குறிப்பிடுகிறேன்.சென்னேரி பகுதி பறையர் இன மக்கள் வழக்கமான மனிதர்களை விடவும் கணிசமாக என்று கூற இயலாத அளவுக்கு கீழ் நிலையில் உள்ளனர்.அவர்களில் பெரும்பாலனோர் மோசமான ஊட்டச்சத்து கொண்டவர்களாக,படுபயங்கரமான குடிசையில்,மோசமான ஆடைகளை அணிந்து,தொழுநோய் மற்றும் மற்ற கொடுரமான நோய்களை கொண்டவர்களாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.அவர்களுடைய குடிசைகள் பன்றிகள் வசிக்கும் இடங்களை போன்றும், கல்லாதவர்களாகவும்,யாராலும் கவனிக்கப்படாத,இரக்கப்படாத மனிதர்களாகவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.இது அனைவரும் அறிந்த உண்மைதான் என்றாலும்,நான் இவ்வாறு இந்த மனிதர்களைப் பற்றி கூறுவதற்காக மதராஸ் மாகாண வருவாய் துறை மற்றும் பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.இந்தியா நாட்டினுடைய அல்ல,ஆனால் இங்கிலாந்து மக்களின் பொது மனசாட்சி இந்த மகிழ்ச்சியற்ற பரிதாபத்துக்குரியவர்களின் நிலையை கண்டு,அதை தணிப்பதற்காக வெகுண்டு எழும்காலம் வெகுதொலைவில் இல்லை.’’
“பறையர்களிடம் இருக்கும் பொருட்கள் மிகவும் பழமையானது. (மத்திய ஆப்பிரிக்காவிலிருந்து வாங்கி வந்த பொருட்கள் போல). மேல் சாதி இந்துக்கள் இவர்களுக்கு மிகக் கேவலமான வேலைகளையே கொடுக்கின்றனர். இந்து மதம் இவர்களது ஆன்மீக வாழ்விற்கோ அல்லது பொருளாதார முன்னேற்றத்திற்கோ எந்தவிதத்திலும் பயனளிக்கவில்லை. இந்துக்கள் இவர்களை மனிதக்குலத்தின் மிகத்தாழ்ந்த இனமாகவே கருதுகிறார்கள். மிக மோசமான சுகாதாரமற்ற நிலையில் வாழ்கிறார்கள்”
“1844 ல் அடிமை முறை ஒழிக்கப்பட்ட பின்னும் அடிமைகளாக இருந்த பறையர்கள் படியாட்கள் என்ற முறையில் மீண்டும் அடிமைகளாக்கபடுகின்றனர். இவர்கள் தாங்கள் வாங்கிய கடனை அடைப்பதற்காக தங்களையும் தங்கள் வாரிசுகளையும் மொத்தமாக அடிமைகளாக்கிக்கொள்கின்றனர். இதிலிருந்து விடுபட இவர்களுக்கு ஒரே வழிதான் இருந்தது. அதாவது மற்றொரு எஜமானிடம் கடன் வாங்கிக் கொடுத்துவிட்டு புது எஜமானிடம் மனித அடமானமாகப் போவதுதான் அந்த வழி. வேறு வழியில் விடுபட முயலும் பறையர்களை கிராமம் அல்லது தாலுக்கா நீதிமன்றத்தில் உடன்பாட்டை மீறினார்கள் என்று (!) ‘உடன்பாட்டு மீறல் சட்டத்தின்’கீழ் எஜமானர்கள் வழக்கு தொடுத்து தண்டனை வாங்கிக்கொடுக்கிறார்கள். மிராசுதாரர்களாக பிராமணர்களும் வெள்ளாளர்களும் மட்டுமே இருக்கிறார்கள். இவர்களே நிலங்கள் அனைத்தையும் வைத்திருக்கிறார்கள். இவர்களுக்கு அடுத்து உள்ள இடைச்சாதியினரும் நிலங்களை வைத்திருக்கிறார்கள். ஆனால் கடைசியிலுள்ள பறையர்கள் எல்லோருமே நிலமற்ற அடிமைகளாக இருக்கிறார்கள். அப்படியே பறையர்கள் புறம்போக்கு நிலத்திற்கு அரசிடம் விண்ணப்பம் செய்தாலும் அந்த நிலம் மிராசுதாரருக்கு வேண்டுமா அல்லது வேண்டாமா என்று அரசு கேட்கும்(!). மிராசுதாரர் வேண்டாம் என்று சொல்வது கிடையாது. அடுத்து பட்டாதாரரிடம் அந்த நிலம் வேண்டுமா என்று அரசு கேட்கும். அவரும் வேண்டாம் என்று சொன்னால்தான் அந்த புறம்போக்கு நிலம் பறையர்களுக்கு கிடைக்கும்.ஆனால் பறையர்கள் நிலம் வைத்திருக்க விரும்பி அரசைக்கேட்டால் கொடுக்க மாட்டார்கள் என்று எண்ணி புறம்போக்கு நிலத்தை எடுத்து அதைக் கஷ்டப்பட்டு சரிசெய்து விளை நிலமாக்கினால் அதுவரை அமைதியாய் இருக்கும் மிராசுதாரர்கள் கடைசியில் அந்த நிலத்தை அபகரித்துவிடுகின்றார்கள்.”
“சிறிது நிலம், சொந்தமான குடிசை, எழுதப்படிக்க தெரிந்திருத்தல், தனது உழைப்பில் சுதந்திரம், தன்மானம் ஆகியவற்றை அவர்களுக்கு கொடுத்தால் பறையர்களின் வாழ்வு இப்போதிருக்கும் மகிழ்ச்சியற்ற அடிமை நிலையிலிருந்து மாறுபட்டதாக இருக்கும்” என்று 5 அக்டோபர் 1891 அன்று கையெழுத்திட்டு தன் அறிக்கையை ஜெ.எச்.ஏ.திரமென்ஹீர் சமர்ப்பிக்கிறார். 1891 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் நடந்த விவாதத்திற்கு பிறகு 1892 செப்டம்பர் 30 அன்று அரசாணையை (அரசாணை எண் 1010/ நாள் : 30.09.1892) வெளியிட்டது.இச்சட்டத்தின்படி “பஞ்சமி நிலம்” என்ற பெயரிலும் “டி.சி. நிலம் (Depressed Class Land)” என்ற பெயரிலும் இந்தியா முழுவதுமுள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நிலம் வழங்கப்பட்டு,தமிழகத்தில் மட்டும் சுமார் 12 லட்சம் ஏக்கர் நிலம் ஒடுக்கப்பட்ட மக்களுக்குக் கொடுக்கப்பட்டது…
பஞ்சமி நிலம் குறித்து விவாதம் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் ஜெ.எச்.ஏ. திரமென்ஹீர் குறித்து நாம் நினைவு கூறுவது இன்றியமையாததாகும்…
இன்றைய காலக்கட்டத்தில் தலித்கள் சாதி இந்துக்களிடம் பஞ்சமி நிலங்களை வஞ்சகமாக இழந்து கையருநிலையில் நிற்கிறோம்…இருப்பினும் இன்று இல்லை என்றாலும்,என்றாவது ஒருநாள் திரமென்ஹீர் விரும்பிய படி பஞ்சமி நிலங்கள் தலித் மக்களிடமே நிச்சயம் பெற்று தரப்படும் என்பது மட்டும் உறுதி.!