?முஹர்ரம் மாத சிந்தனைகள்!!?
(பாகம்-1)
ஹிஜிரி ஆண்டு உருவான வரலாறு!!
ஆண்டுக் கணக்குகளின் துவக்கத்தைப் பெரும்பாலும் முக்கிய நிகழ்ச்சியை கவனத்தில் கொண்டு ஆரம்பம் செய்துள்ளனர்.
ஈஸா நபியின் பிறப்பை அடிப்படையாக வைத்து கிறிஸ்தவர்கள் ஆண்டை கணக்கிட்டுள்ளனர். கி.பி (கிறிஸ்து பிறப்புக்கு பின்) கி.மு. (கிறிஸ்து பிறப்புக்கு முன்) என்று குறிப்பிடுகின்றனர். இந்த நடைமுறையே இன்று பரவலாகப் பின்பற்றப்படுகிறது.
இஸ்லாமியர்கள் ‘ஹிஜ்ரி ஆண்டு’ என்று குறிப்பிடுகின்றனர். இந்த ஹிஜ்ரி ஆண்டு எப்படி வந்தது? என்பது இஸ்லாமியர்களில் பலருக்கே தெரியாது. இந்த ஹிஜ்ரி ஆண்டு எப்படி வந்தது என்பதை நாம் விரிவாகக் காண்போம்…
நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த வரை இந்த ஹிஜ்ரி ஆண்டு இருந்ததில்லை. மேலும் ஆண்டின் முதல் மாதம் என்பது முஹர்ரம் என்றும் இருக்கவில்லை. நபிகளாரின் காலத்தில் யானை ஆண்டு என்றே குறிப்பிட்டு வந்தனர்.
நபி (ஸல்) அவர்கள் காலத்திற்கு முன்னர் ‘ஆப்ரஹா’ என்ற மன்னன் யானை படையுடன் கஅபத்துல்லாஹ்வை அழிக்க வந்த போது அல்லாஹ், பறவைகள் மூலம் அந்தப் படையை முறியடித்தான். (திருக்குர்ஆனின் 105வது அத்தியாயம் இது தொடர்பாகப் பேசுகிறது. இந்த அத்தியாயத்திற்கு ‘அல் ஃபீல்’ யானை என்றே பெயரிடப்பட்டுள்ளது.)
இந்தச் சம்பவம் அரபுலகத்தில் பிரபலமானது. இந்தச் சம்பவம் நடந்த ஆண்டு தான் அன்றைய அரபுலகில் வருடத்தைக் குறிப்பிடுவதற்குப் பயன்படுத்தப்பட்டது.
”நானும் நபி (ஸல்) அவர்களும் யானை ஆண்டில் பிறந்தோம்” என்று கைஸ் பின் மக்ரமா (ரலி) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
(நூற்கள்: திர்மிதீ 3552, அஹ்மத் 17218)
இந்தச் செய்தி நபிகளார் காலத்தில் ஆண்டுக் கணக்கை, யானை ஆண்டு என்று குறிப்பிட்டு வந்ததைத் தெளிவாக எடுத்துரைக்கிறது.
நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்குச் சென்ற போது வருடத்தைக் கணக்கிடுமாறு கட்டளையிட்டார்கள். ‘ரபீவுல் அவ்வல்’ மாதத்தில் கணக்கிடப் பட்டது என்ற செய்தி இமாம் ஹாகிமின் அல்இக்லீல் என்ற நூலில் இடம் பெற்றிருக்கிறது. ஆனால் இது முஃளல் என்ற வகையைச் சார்ந்த மிகவும் பலவீனமான செய்தி என்று ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் குறிப்பிடுட்டுள்ளார்கள். (பத்ஹுல் பாரீ, பாகம்:7, பக்கம்: 268)
நபி (ஸல்) அவர்கள் காலத்திலும் அவர்களுக்கு அடுத்து வந்த ஜனாதிபதி அபூபக்ர் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்திலும் நாம் தற்போது பயன்படுத்தும் ஹிஜ்ரி ஆண்டு பயன்படுத்தப்படவில்லை.
உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் தான் இந்த ஹிஜ்ரி ஆண்டு துவங்கப்பட்டது.
இஸ்லாமிய ஆண்டை எதை அடிப்படையாக வைத்துப் பயன்படுத்துவது என்பதில் நான்கு கருத்துக்கள் மக்களிடம் இருந்தன.
1. நபிகளாரின் பிறப்பு
2. நபிகளார் இறைத்தூதராக ஆன ஆண்டு
3. நபிகளார் ஹிஜ்ரத் செய்த ஆண்டு
4. நபிகளாரின் இறப்பு.
இதில் நபிகளார் எப்போது பிறந்தார்கள்? எப்போது இறைத் தூதரானார்கள்? என்பதில் கருத்து வேறுபாடு இருந்ததால் இவற்றைக் கணக்கில் கொள்ளவில்லை.
நபிகளார் இறந்த ஆண்டு அவர்களை கவலைக்கு உள்ளாக்கியதால் அதையும் எடுத்துக் கொள்ளவில்லை. இறுதியாக இருந்த ஹிஜ்ரத் செய்த ஆண்டைத் தேர்வு செய்தார்கள்.
(பத்ஹுல் பாரீ, பாகம்:7, பக்கம்: 268)
மக்கள் (ஆண்டுக் கணக்கை) நபி (ஸல்) அவர்கள் இறைத்தூதராக நியமிக்கப்பட்ட (அவர்களுடைய நாற்பதாவது வய)திலிருந்தோ அவர்களுடைய மறைவிலிருந்தோ கணக்கிடவில்லை.
மதீனாவுக்கு நபி (ஸல்) அவர்கள் (ஹிஜ்ரத் செய்து) வந்ததிலிருந்தே கணக்கிட்டார்கள்.
அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஅத் (ரலி) நூல்: புகாரீ (3934)
உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் ஹிஜ்ரி 16 அல்லது 17வது ஆண்டில் இந்த ஆண்டு முடிவு செய்யப்பட்டது. (பத்ஹுல் பாரீ, பாகம்: 7, பக்கம்: 268)
அபூமூஸா (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் ‘உங்களிடமிருந்து கடிதம் வருகிறது; ஆனால் அதில் காலம் குறிப்பிடப் படுவதில்லை’ என்று கூறியிருந்தார். அப்போது உமர் (ரலி) அவர்கள் மக்களை ஒன்றிணைத்தார்கள்… என்ற செய்தியை ஹாகிம் அவர்கள் பதிவு செய்துள்ளார்கள் என்று ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். (பத்ஹுல் பாரீ பாகம்:7, பக்கம்: 268)
உமர் (ரலி) அவர்கள் மக்களை ஒன்றிணைத்து ‘வருடத்தை எந்த நாளிலிருந்து துவங்கலாம்?’ என்று ஆலோசனை கேட்டார்கள். அப்போது அலீ (ரலி) அவர்கள், ‘நபி (ஸல்)அவர்கள் இணை வைப்பு பூமியை விட்டு விட்டு நாடு துறந்து சென்ற நாளை எடுத்துக் கொள்ளலாம்’ என்றார்கள். அவ்வாறே உமர் (ரலி) அவர்கள் செய்தார்கள்.
அறிவிப்பவர்: ஸயீத் பின் முஸய்யப் நூல்: ஹாகிம் (4287)
நபிகளார் அவர்கள் மதீனாவை விட்டு ஹிஜ்ரத் செய்து சென்ற பின்னர் தான் இஸ்லாம் வளர்ச்சி பெற்றது. மேலும் இறைவனை நிம்மதியாக வணங்க முடிந்தது; இறையில்லமும் கட்டப்பட்டது. எனவே இஸ்லாத்தின் வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாக இருந்த இந்த ஹிஜ்ரத்தை ஆண்டின் பெயராகக் குறிப்பிட்டனர்.
தொடரும்…