பார்வையற்றோர் மற்றும் ஆதரவற்றோருக்கு சேவை செய்வது கடவுளுக்கு செய்கிற சேவை என மதுரையில் நடைபெற்ற விழாவில் நடிகர் பயில்வான் ரங்கநாதன் பேசினார் மதுரையின் அட்சய பாத்திரம் டிரஸ்ட் சார்பில் தீபாவளி திருநாளை முன்னிட்டு பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் 100 பேர் குடும்பத்திற்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஹோட்டல் தமிழ்நாடு அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வழக்கறிஞர் அழகுராம் ஜோதி தலைமை தாங்கினார். மதுரை மெட்ரோ ஹெரிடேஜ் ரோட்டரி சங்க தலைவர் சி. ஆர். வெங்கடேஷ் மதுரை கிழக்கு ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் பிரபு கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தார். மதுரையின் அட்சய பாத்திரம் டிரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலு வரவேற்றார். நிகழ்ச்சியில் நடிகர் பயில்வான் ரங்கநாதன் பங்கேற்று பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் குடும்பத்திற்கு அரிசி மற்றும் இனிப்பு மற்றும் பிற பொருட்களை வழங்கி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:- சேவை ஒன்றுதான் உலகத்தில் சிறந்தது நாம் எவ்வளவுதான் பல காரியங்கள் செய்தாலும் வாழ்க்கையிலே பிறருக்கு உதவுகிற போது கிடைக்கிற சந்தோஷம் வேறு எதிலும் கிடையாது. தானத்தில் சிறந்த தானம் அன்னதானம் . அதுவும் குறிப்பாக வரியோர்கள் மாற்றுத்திறனாளிகள் போன்றவர்களுக்கு உணவு கொடுப்பது நிவாரண பொருட்களை கொடுப்பது என்பது மிக சிறந்ததாகும். இப்படி சேவை உள்ளம் படைத்த மனிதர்களை நோக்கி தான் கடவுள் அருள் காட்டுவார். மதுரையின் அட்சய பாத்திரம் ட்ரஸ்ட் 500 நாட்களுக்கு மேலாக உணவு வழங்கி வருவது பாராட்டுதலுக்கு உரியது உலகத்தில் உள்ள பெரும் தலைவர்கள் இன்றைக்கு அவரவர்கள் செய்த சேவையினாலேதான் உயர்ந்து இருக்கிறார்கள். ஒவ்வொருவரும் வாழ்க்கையில் குறிப்பாக தினமும் ஏதாவது ஒரு சேவை நல்ல காரியங்கள் செய்ய வேண்டும் என்கிற வைராக்கியத்தை கொள்ள வேண்டும். ஆதரவற்றோருக்கு செய்கிற சேவை கடவுளுக்கு செய்கிற சேவையாக கருதப்படும் இவ்வாறு நடிகர் பயில்வான் ரங்கநாதன் பேசினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை மதுரையின் அட்சய பாத்திரம் டிரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலு செய்திருந்தார். மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்