கோவை
ஏறத்தாழ 90 ஆண்டுகளுக்கு மேலாக தினமும் யோகா பயிற்சி செய்ததுடன், 600-க்கும் மேற்பட்ட யோகா மாஸ்டர்களை உருவாக்கிய கோவை நானம்மாள் (100) இன்று காலமானார். இவர் பத்மஸ்ரீ விருது பெற்றவர்.
கோவை கணபதி பாரதி நகரில் ‘ஓசோன் யோகா மையம்’ என்ற பெயரில் யோகா பயிற்சிக் கூடத்தை 1971-ம் ஆண்டிலிருந்து நடத்தி வரும் நானம்மாள், பொள்ளாச்சி அருகேயுள்ள ஜமீன்காளியாபுரத்தைச் சேர்ந்தவர்.
150 விருதுகள், 6 தேசிய அளவிலான தங்கப் பதக்கம், 2014-ல் கர்நாடக அரசின் யோக ரத்னா விருது, 2017 மார்ச் 8-ம் தேதி அப்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியால் பெண் சக்தி விருது என விருதுகளைக் குவித்துள்ள நானம்மாளுக்கு, மத்திய அரசு கடந்த ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது.
கடந்த 15 நாட்களாகவே உணவைக் குறைத்துக் கொண்ட நானம்மாள், நீராகாரம் மட்டும் அருந்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று (அக். 26) மதியம் 12.30 மணியளவில் அவர் இயற்கை எய்தினார். நாளை காலை 7 மணியளவில் துடியலூர் எரியூட்டும் மயானத்தில் யோக பாட்டியின் இறுதிச்சடங்கு நடைபெறுகிறது.
மேலும் இவரிடம் யோக கற்ற மைதிலி, யோகா பாட்டியைப் போல தானும், நான் கற்ற கலையை மற்றவர்களுக்கும் கற்பிக்க முயற்சி செய்கிறேன் என்று கூறியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.