முன்னாள் பிரதமர், பாரத ரத்னா திரு.ராஜிவ்காந்தி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, இன்று (20.08.2024) தென்சென்னை மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி ஏற்பாட்டில் சைதாப்பேட்டை சின்னமலையில் அமைந்துள்ள ராஜிவ்காந்தி அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செய்தோம். பின்பு சமூக நல்லிணக்கநாள் உறுதிமொழி எடுத்துக் கொண்டோம். அங்கிருக்கும் கொடிக்கம்பத்தில் காங்கிரஸ் பேரியக்கத்தின் கொடியேற்றினோம்.
நிகழ்வில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர்கள் திரு.கே.வீ.தங்கபாலு அவர்கள், திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள், தமிழ்நாடு சட்டமன்ற பேரவை காங்கிரஸ் தலைவர் திரு.எஸ்.ராஜேஷ்குமார் அவர்கள், துணைத்தலைவர் திரு.சொர்ணா சேதுராமன் அவர்கள், அமைப்புச் செயலாளர் திரு.ராம்மோகன் அவர்கள், கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பின் திரு.விஜய்வசந்த் அவர்கள் மற்றும் தென்சென்னை மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் வழக்கறிஞர் எம்.ஏ.முத்தழகன் அவர்கள் மற்றும் நிர்வாகிகள், செயல்வீரர்கள் கலந்து கொண்டார்கள்.
இதை முன்னிட்டு, காங்கிரஸ் தலைவர் திரு. Mallikarjun Kharge மற்றும் CPP தலைவர் திருமதி. சோனியா காந்தி ஜி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பாராளுமன்ற வளாகத்தில் அஞ்சலி செலுத்தினர்.
இன்று (20.08.2024) இந்தியாவை உலக அரங்கில் தனித்துவமாய் காட்டிய இளம் பிரதமர் பாரத ரத்னா திரு ராஜீவ்காந்தி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, திருப்பெரும்புதூரில் அவரது நினைவிடமான தியாக பூமியில் மலர் வளையம் வைத்து, மலர் தூவி மாரியாதை செய்தோம்.
பின்பு நினைவிடத்தில் நுழைவு வாயில் அருகே அமைந்துள்ள இரும்பு பெண்மணி அன்னை இந்திரா காந்தி அவர்களின் திருவுருவச் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செய்தோம்.
ஒன்றிய பா.ஜ.க. அமைச்சர் சுரேஷ் கோபி பேச்சுக்கு கண்டனம் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஒன்றிய பா.ஜ.க. அமைச்சர் சுரேஷ்கோபி, முல்லைப் பெரியாறு அணை இடிந்தால் யார் பொறுப்பு ? நீதிமன்றம் பதில் சொல்லுமா ? அல்லது நீதிமன்றங்களில் இருந்து அத்தகைய முடிவுகளை பெறுபவர்கள் பொறுப்பேற்பார்களா ? என்று மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்துகிற வகையில் விஷமத்தனமான கருத்துகளை கூறியிருக்கிறார். இதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்.
திரு.கு.செல்வப்பெருந்தகை தலைவர்,தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி
இந்த நூற்றாண்டின் ஒப்பற்றத் தலைவர் ஜனநாயகத்தில் அதிகாரங்கள் ஓரிடத்தில் குவிந்திருப்பதை தடுத்து நாடாளுமன்றம், சட்டமன்றம் ஆகியவற்றுக்கு அடுத்த நிலையில் பஞ்சாயத்து ராஜ், நகர்பாலிகா என்கிற அமைப்புகளை உருவாக்கி மக்கள் பங்கேற்கும் ஜனநாயகத்தை அரசமைப்புச் சட்ட திருத்தத்தின் மூலம் உருவாக்குவதில் வெற்றி கண்டவர். இதன்மூலம் ஜனநாயகத்தை பரவலாக்கினார். இலங்கை தமிழர்களின் 40 ஆண்டுகால பிரச்சினையை தீர்க்க உடன்பாடு கண்டவர். இலங்கையில் தமிழர் ஆட்சியை உருவாக்கி, தமிழை அரியணையில் ஏற்றி, தமிழ் தாயகப் பகுதியை உருவாக்கியவர் ராஜிவ்காந்தி. இந்தியாவின் சிறந்த வல்லமைமிக்க பிரதமராக அவர் சுடர்விட்டார். இந்தியாவை பற்றி ராஜிவ்காந்திக்கு நிறைய கனவுகள் இருந்தது. இந்தியாவும், இந்தியர்களும் உலகில் முன்னணியில் இருக்க வேண்டுமென்று ராஜிவ்காந்தி கனவு கண்டார். அதற்காக நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார். இந்திய நாட்டின் பிரதமராக ஐந்தாண்டுகளில் தேசிய, சர்வதேச அரங்கில் உலகம் போற்றும் வகையிலே சாதனைகளை படைத்து இந்த நூற்றாண்டின் ஒப்பற்ற தலைவராக விளங்கினார்.
லேட்டரால் என்ட்ரி என்பது தலித்துகள், ஓபிசிகள் மற்றும் பழங்குடியினர் மீதான தாக்குதலாகும். பாஜகவின் ராம ராஜ்ஜியத்தின் திரிபுபடுத்தப்பட்ட பதிப்பு அரசியலமைப்பை அழிக்கவும், பகுஜன்களிடமிருந்து இட ஒதுக்கீட்டைப் பறிக்கவும் முயல்கிறது.
IAS பணியை தனியார்மயமாக்குவதுதான் மோடியின் உத்தரவாதம் நாட்டின் உயர்மட்ட அதிகாரத்துவம் உட்பட அனைத்து உயர் பதவிகளிலும் SC/ ST மற்றும் OBC பிரதிநிதித்துவம் பெறவில்லை என்று நான் எப்போதும் கூறி வந்தேன். இதை சரி செய்வதற்குப் பதிலாக, குறுக்குவழி மூலம் அவர்கள் உயர் பதவிகளில் இருந்து மேலும் வெளியே தள்ளப்படுகிறார்கள். இடஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டுவர, ‘IAS’ பணியை தனியார்மயமாக்குவதுதான் ‘மோடியின் உத்தரவாதம்’. –
ஆகஸ்ட் 20 பாரத ரத்னா ராஜீவ்காந்தி அவர்களின் 80 ஆவது பிறந்தநாள் இந்தியாவை 21 ஆம் நூற்றாண்டிற்கு அழைத்துச் செல்வேன் என்று உறுதிபூண்ட ராஜிவ்காந்தி உலகமே வியக்கும் வகையில் ஒப்பற்ற சாதனைகளை நிகழ்த்தினார். தமது 40 ஆவது வயதில் இந்திய நாட்டின் இளைய பிரதமராக பொறுப்பேற்று அவர் நிகழ்த்திய சாதனைகள் ஏராளம். விஞ்ஞானமும், தொழில்நுட்பமும் தான் இந்த நாட்டின் வறுமையை விரட்ட உதவும் என்று நம்பியவர். இன்று அறிவியல் துறையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சிக்கு அன்றே வித்திட்டவர். நாட்டை எதிர்நோக்கியிருந்த பல பிரச்சினைகளை தீர்ப்பதற்கு திறந்த மனதுடன் பல முயற்சிகளை மேற்கொண்டு வெற்றி கண்டவர். பாரத ரத்னா ராஜிவ்காந்தி அவர்களின் 80 ஆவது பிறந்தநாளான ஆகஸ்ட் 20 ஆம் தேதி அனைத்து மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளும் அவரது திருவுருவப் படத்தை வாகனங்களில் அலங்கரித்து முக்கிய வீதிகளில் ஊர்வலமாக எடுத்துச் சென்று வழிநெடுக அவரது ஆட்சியில் நிகழ்த்தப்பட்ட சாதனைகளின் துண்டு பிரசுரத்தை விநியோகிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இந்நிகழ்வை மாவட்ட, வட்டார, நகர, பேரூர், கிராமம் என அனைத்து நிலைகளிலும் நடத்தி மறக்க முடியாத மாபெரும் தலைவர் ராஜிவ்காந்தியின் நினைவை போற்றுவோம்.
கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஒன்றிய பா.ஜ.க. அமைச்சர் சுரேஷ்கோபி, முல்லைப் பெரியாறு அணை குறித்து மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்துகிற வகையில் விஷமத்தனமான கருத்துகளை கூறியிருக்கிறார். இதுகுறித்து அவர் கூறும் போது, ‘முல்லைப் பெரியாறு அணை தற்போது பாதுகாப்பானதாக இல்லை. எனவே, இந்த அணைக்கு பதிலாக அருகில் புதிய அணை கட்ட வேண்டும். முல்லைப் பெரியாறு அணை இடிந்தால் யார் பொறுப்பு ? நீதிமன்றம் பதில் சொல்லுமா ? அல்லது நீதிமன்றங்களில் இருந்து அத்தகைய முடிவுகளை பெறுபவர்கள் பொறுப்பேற்பார்களா ? இனியும் கேரளாவால் கண்ணீரில் மூழ்கியிருக்க முடியாது” என்ற வகையில் பேசி இடுக்கி மாவட்ட மக்களிடையே அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தியிருக்கிறார். இத்தகைய கூற்றின் மூலம் சுரேஷ் கோபி தனது அறியாமையைத் தான் வெளிப்படுத்தியிருக்கிறார். கடந்த கால முல்லைப் பெரியாறு அணை குறித்து ஏற்பட்ட பிரச்சினைகளும், உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புகளையும் படிக்காமல் ஏனோ தானோ என்று அரைவேக்காட்டுத்தனமாக ஆதாரமற்ற இத்தகைய கருத்துகளை கூறியிருக்கிறார். இந்த கூற்றின்படி நீதிமன்ற தீர்ப்புகளை விமர்சிப்பது அப்பட்டமான நீதிமன்ற அவமதிப்பாகும். இதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்.
முல்லைப் பெரியாறு அணையை பொறுத்தவரையில் தமிழக நீர்பாசனத்திற்கு பயன்படுகிற அணையாகும். இந்த அணை கேரள மாநிலத்தில் இருந்தாலும், அதை பராமரிக்கிற பொறுப்பு தமிழக பொதுப்பணித்துறைக்கு தான் இருக்கிறது. இதுகுறித்து பிரச்சினைகள் ஏற்பட்ட போது, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை அணுகியதால் 27.2.2006 இல் அதன் தீர்ப்பின்படி அணையின் நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்தலாம் என ஆணையிட்டது. இந்த அணையின் வலிமை குறித்து ஆய்வு செய்ய உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.எஸ். ஆனந்த் தலைமையில் ஐவர் கொண்ட வல்லுநர் குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவின் அறிக்கையின்படி அணையின் நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் என்றும், அதனால் அணைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் அறிக்கை கூறியது. இந்நிலையில் கேரள அரசு ஒரு சட்டத்தை இயற்றி தமிழ்நாட்டின் உரிமைகளை பறிக்க முயற்சி செய்தது. ஆனால், இதை எதிர்த்து தமிழ்நாடு அரசு தொடுத்த வழக்கில் 07.05.2014 அன்று உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு கேரள அரசு இயற்றிய சட்டம் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது, தமிழ்நாடு அரசின் ஒப்புதல் இல்லாமல் புதிய அணை கட்ட முடியாது, வல்லுநர் குழு அறிக்கையின்படி நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம், புதிய அணை கட்ட வேண்டிய அவசியம் தற்போது இல்லை என்றும் தீர்ப்பு வழங்கியது.
உச்சநீதிமன்ற தீர்ப்புகள் தமிழ்நாட்டின் உரிமைக்கு பாதுகாப்பாக இருக்கும் போது கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஒன்றிய பா.ஜ.க. அமைச்சர் தமிழ்நாட்டின் நலன்களுக்கு விரோதமாக இத்தகைய கருத்துகளை கூறுவதை எவரும் ஏற்றுக் கொள்ள முடியாது. ஒன்றிய அமைச்சர் சுரேஷ் கோபி கேரள மாநிலத்திற்கு மட்டும் அமைச்சரா அல்லது இந்தியா முழுமைக்குமான அமைச்சரா என்பதை தெளிவுபடுத்த வேண்டும். ஒன்றிய அமைச்சர் சுரேஷ் கோபியின் பேச்சு குறித்து பிரதமர் மோடி தலையிட்டு ஒன்றிய அரசின் நிலையை தெளிவுபடுத்த வேண்டும். இந்த கருத்து ஒன்றிய அமைச்சரின் கருத்தா அல்லது பிரதமர் மோடி அரசின் கருத்தா என்பதை அறிந்து கொள்ள தமிழ்நாட்டு மக்கள் விரும்புகிறார்கள்.
ஏற்கனவே காவிரி பிரச்சினையில் அண்டை மாநிலமான கர்நாடகத்திடம் உரிமைகளுக்காக போராடிக் கொண்டிருக்கிற நேரத்தில் இன்னொரு அண்டை மாநிலமான கேரள மாநிலத்துடன் போராடுகிற நிலைக்கு ஒன்றிய அமைச்சர் சுரேஷ்கோபி தள்ளியிருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது. கூட்டாட்சி தத்துவத்தில் கேரள மாநில முதலமைச்சர் பினராய் விஜயன் அவர்களுக்கு நம்பிக்கை இருக்குமேயானால் இதுகுறித்து அவரது கருத்தை வெளியிட வேண்டும்.
எனவே, மாநில உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் ஒன்றிய அமைச்சர் சுரேஷ் கோபியின் முல்லைப் பெரியாறு அணை குறித்த கருத்தை பிரதமர் மோடியின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
இந்திய விடுதலை போராட்ட வீரரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவருமான தீரர் எஸ். சத்தியமூர்த்தி அவர்களின் 137 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகைக்கு முன்புறமாக அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு K Selvaperunthagai எம்.எல்.ஏ. அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்வில் பெருநகர சென்னை மாநகராட்சி மாண்புமிகு மேயர் திருமதி பிரியராஜன் திமுக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணை தலைவர் திரு சொர்ண சேதுராமன், அமைப்பு செயலாளர் திரு ராம் மோகன், சென்னை மாமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.