மீனவ குழுவுக்கு நாடாளுமன்ற வளாகத்திற்குள் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளியே வந்து அவர்களை சந்தித்து பேசினார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜூலை 22ஆம் தேதி முதல் இரு அவைகளிலும் நடைபெற்று வருகிறது. மத்திய நிதியமைச்சர் மக்களவையில் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட் குறித்து விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இடையே, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை சந்திக்க மீனவப் பிரதிநிதிகள் குழு வந்தது.
ஆனால், அவர்களுக்கு நாடாளுமன்ற வளாகத்திற்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைவதற்கான அனுமதிச் சீட்டு அவர்களுக்கு வழங்கப்படவில்லை. இதனை அறிந்த எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தன்னுடைய அறையில் இருந்து வெளியே வந்து, வரவேற்புப் பகுதிக்குச் சென்று மீனவ குழுவை சந்தித்துப் பேசினார்.
ராகுல் காந்தி மீனவ குழுவை சந்திக்க வெளியே வந்தபோது செய்தியாளர்களுடன் பேசிய அவர் கூறியதாவது:
‘நாங்கள் யாரை வேண்டுமானாலும் சந்திக்கலாம். இது எங்கள் உரிமை. ஆனால் மீனவர் குழுவை அவர்கள் உள்ளே அனுமதிக்கவில்லை. விவசாயிகள் பற்றி நான் அவையில் பேசியிருந்தேன். மீனவர்களைத் தடுக்கவில்லை என்று அவைத் தலைவர் கூறினார். ஆனால், இப்போது அவர்கள் மீண்டும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். நான் தொடர்ந்து மக்களை சந்தித்துக் கொண்டிருக்கிறேன். என்னுடைய வேலையைச் செய்ய விடுங்கள். இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.
சென்னை : சுதந்திர தினமான ஆகஸ்ட் 15-ம் தேதி அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்த தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.
தமிழகத்தில் ஆண்டுக்கு ஆறுமுறை கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. அதன்படி, குடியரசு தினம் (ஜன. 26), உலக தண்ணீா் தினம் (மாா்ச் 22 ), தொழிலாளா் தினம் (மே 1), சுதந்திர தினம் (ஆக. 15), மகாத்மா காந்தி பிறந்த தினம் (அக். 2), உள்ளாட்சிகள் தினம் (நவ. 1) ஆகிய தினங்களில் நடத்தப்படும் கிராம சபைக் கூட்டங்களில் ஊராட்சிகளின் வளா்ச்சிப் பணிகள், எதிா்காலத் திட்டங்கள் ஆகியன குறித்து விவாதிக்கப்படும். இந்நிலையில், மக்களவைத் தோ்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்ததால் மே தினமான 1ம் தேதி தமிழகத்தில் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படவில்லை.
இதைத் தொடர்ந்து, சுதந்திர தினமான ஆகஸ்ட் 15-ம் தேதி அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்த தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குனர் பொன்னையா சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அந்த அறிக்கையில், “ஆகஸ்ட் 15ம் தேதி காலை 11 மணி அளவில் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும்.கிராம மக்கள் அனைவரும் பங்கேற்கும் வகையில் இடம், நேரத்தை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் கிராம சபை கூட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டிய தலைப்புகள் குறித்தும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தூய்மையான குடிநீர் விநியோகம், இணைய வழி வரி செலுத்தும் சேவை, இணைய வழி மனை பிரிவு மற்றும் கட்டிட அனுமதி வழங்குதல் உள்ளிட்ட குறித்து ஆலோசிக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மகாத்மா தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம், தூய்மை பாரத இயக்கம், ஜல் ஜீவன் திட்டம் உள்ளிட்டவை குறித்தும் ஆலோசனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விலைவாசி உயர்வைக் கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜூலை 22ஆம் தேதி முதல் இரு அவைகளிலும் நடைபெற்று வருகிறது. மத்திய நிதியமைச்சர் மக்களவையில் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட் குறித்து விவாதம் நடைபெற்று வருகிறது. வக்ஃப் சட்டத்தில் திருத்தம் செய்யும் முக்கிய மசோதா இன்று தாக்கல் செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் விலைவாசி உயர்வைக் கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வெங்காயம் மற்றும் இதர காய்கறிகளின் விலை உயர்வுக்கு எதிராக பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் வெங்காய மாலை அணிந்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை பாஜக உறுதி செய்ய வேண்டும். மகாராஷ்டிரா விவசாயிகள் மீதான ஏற்றுமதி தடையை நீக்க வேண்டும், போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகளுக்கு நீதி வழங்குவதே எங்களது நோக்கம் என கோஷமிட்டனர்.
சென்னை: தமிழக அரசின் தமிழ்ப் புதல்வன் திட்டத்தை கோவையில் நாளை (ஆக.9) முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைக்கிறார்.
இதுதொடர்பாக தமிழக அரசு விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ‘அரசுப் பள்ளிகளில் பயின்ற, ஏழை, எளிய மாணவர்களை சாதனையாளர்களாக உருவாக்கிடவும், அரசுப் பள்ளி மாணவரின் உயர்கல்விச் சேர்க்கையை உயர்த்திடவும் தமிழ்ப் புதல்வன் எனும் ஒரு மாபெரும் திட்டம் வரும் நிதியாண்டு முதல் அறிமுகப்படுத்தப்படும். இத்திட்டத்தின் கீழ், 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்று உயர்கல்வியில் சேரும் மாணவர்கள் பாடப் புத்தகங்கள், பொது அறிவு நூல்கள் மற்றும் இதழ்களை வாங்கி அவர்களது கல்வியை மெருகேற்றிட உதவும் வகையில், மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்’ என இந்த ஆண்டின் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது.
அந்த அறிவிப்பினை நிறைவேற்றும் வகையில் தமிழ்ப் புதல்வன் திட்டத்தை நாளை (9.8.2024 அன்று) கோவை மாநகரில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இத்திட்டத்தின் வாயிலாக, அரசுப் பள்ளிகளிலும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் படித்து 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று கல்லூரிகளில் சேரும் ஏறத்தாழ 3 லட்சத்து 28 ஆயிரம் கல்லூரி மாணவர்கள் மாதந்தோறும் ரூ.1,000 பெற்றுப் பயன் அடைவார்கள்.
இந்த திட்டத்திற்காக தமிழக அரசு 360 கோடி ரூபாயை இந்த ஆண்டிற்கு அனுமதித்துள்ளது. பொருளாதார வசதிக் குறைவு உட்பட பல்வேறு காரணங்களால் பள்ளிப் படிப்புக்குப் பின் உயர் கல்வியைத் தொடர முடியாத நிலையில் இருந்த மாணவர்களுக்கு உயர்கல்வியில் சேர உதவுகிறது.
கல்லூரி செல்லும் மாணவர்களின் உள்ளங்களில் தன்னம்பிக்கையை வளர்க்கிறது, கற்கும் ஆர்வத்தைப் பெருக்குகிறது. பெற்றோரின் பொருளாதாரச் சுமையைக் குறைக்கிறது. குடும்பங்களின் வளத்தை மேம்படுத்துகிறது. உயர்கல்வியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்துகிறது. தமிழகத்தின் கல்வி வளர்ச்சியை இந்திய அளவில் மேலும் உயர்த்துகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் புதுமைப் பெண் திட்டம் குறித்து, ‘அரசுப் பள்ளிகளில் படித்துக் கல்லூரிகளில் சேரும் மகளிருக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தால் 3 லட்சம் மகளிருக்கு மேல் பயன்பெற்றுள்ளனர். அதேபோல, பள்ளிக் கல்வி முடித்து உயர்கல்வியில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரித்திட, அவர்களுக்கும் மாதம் 1,000 ரூபாய் வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தை உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகள், அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகள் வாயிலாக ஆண்டுதோறும் சராசரியாக 7,72,000 மாணவர்கள் மேல்நிலைக் கல்வியை நிறைவு செய்கிறார்கள்.
இவர்களில் கல்லூரிகளில் சேர்ந்து பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை இந்திய அளவில் தமிழகத்தில் மிக அதிகமாகும். உயர்கல்வி சேர்க்கையில் இந்தியா முதலிடம் என்னும் மிகப் பெரிய சாதனையை தமிழகம் படைத்துள்ளது.
கல்வியே உயர்ந்த செல்வம். இந்தக் கல்விச் செல்வத்தை ஏழை, பணக்காரர், சாதி, மத வேறுபாடுகள் எதுவும் இன்றி எல்லோருக்கும் வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் தமிழகத்தில் உயர்கல்வியை வளர்க்கும் நோக்கில் பள்ளிப் படிப்பை முடித்தவர்கள் கல்லூரிகளில் சேர்ந்து தொடர்ந்து படிக்கவேண்டும் என்பதற்காக, 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்று உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தை சென்னை அரசு பாரதியார் மகளிர் கல்லூரியில் 5.9.2022 அன்று தொடங்கப்பட்டது.
இத்திட்டத்தின் மூலம் வழக்கமாகக் கல்லூரிகளில் சேரும் மாணவிகளைவிடக் கடந்த ஆண்டில் கூடுதலாகக் கல்லூரிகளில் சேர்ந்து மகளிர் பயன் பெறுகின்றனர்.
புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் 2022-2023 ஆம் நிதியாண்டில் 2,09,365 மாணவியர்கள் பயனடைந்து வந்த நிலையில், 2023-2024-ஆம் நிதியாண்டில் சுமார் 64,231 மாணவிகள் கூடுதலாக இணைந்து 2,73,596 மாணவியர்கள் பயனடைந்துள்ளனர் என்பதே இத்திட்டத்தின் வெற்றிக்கு அடையாளமாகும். புதுமைப் பெண் திட்டம் தொடங்கப்பட்டது முதல் தற்போது வரை சுமார் 3,28,280 மாணவியர்கள் பயனடைந்துள்ளனர்.
இத்திட்டத்தின் கீழ், 2022-2023 ஆம் நிதியாண்டில் ரூ.100.11 கோடியும், 2023-2024 ஆம் நிதியாண்டில் ரூ.271.66 கோடியும் மாணவிகளுக்கு மாதம் தோறும் 1,000 ரூபாய் வீதம் ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது. புதுமைப் பெண் திட்டத்திற்கென 2024-2025 ஆம் நிதியாண்டிற்கு ரூ.370.00 கோடி நிதி ஒதுக்கீடு செய்து வழங்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 2024 முதல் ஜுலை 2024 வரை ரூ.95.61 கோடி செலவினம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச்சிறப்பு வாய்ந்த திட்டமானது 2024-2025 ஆம் கல்வியாண்டு முதல் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வியில் பயின்று உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.’ என்று கூறப்பட்டுள்ளது.
புதுடெல்லி: மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் உத்தவ் தாக்கரே முதல்வர் வேட்பாளராக நிறுத்தப்படலாம் என்று தெரிகிறது.
மகாராஷ்டிராவில் பா.ஜ கூட்டணி ஆட்சி நடக்கிறது. சிவசேனாவில் இருந்து பிரிந்து சென்ற ஏக்நாத் ஷிண்டே முதல்வராக உள்ளார். அங்கு அக்டோபரில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் இந்தியா கூட்டணியில் இடம் பெற்று இருக்கும் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார் பிரிவு), சிவசேனா (உத்தவ் தாக்கரே) பிரிவு ஆகியவை தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார்கள். 2 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள உத்தவ் தாக்கரே, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் மற்றும் இந்தியா கூட்டணி தலைவர்களை சந்தித்து பேசினார். உத்தவ் தாக்கரேவுடன் அவரது மகன் ஆதித்யா மற்றும் மாநிலங்களவை எம்பி சஞ்சய் ராவத் ஆகியோர் வந்திருந்தனர்.
அதை தொடர்ந்து சரத்பவார், காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் டெரிக் ஓ பிரையன், ஆம் ஆத்மி தலைவர் சஞ்சய் சிங், சமாஜ்வாதி கட்சி எம்பி ஆதித்யா யாதவ் உள்ளிட்டோரையும் தாக்கரே சந்தித்தார். மகாராஷ்டிராவின் சாங்கிலி மக்களவை தொகுதியில் சிவசேனா-தாக்கரே பிரிவு வேட்பாளர் சந்திரஹர் பாட்டீலை தோற்கடித்த சுயேச்சை எம்பி விஷால் பாட்டீலும் நேற்று உத்தவ் தாக்கரேவை சந்தித்தார். அப்போது மகாராஷ்டிராவில் உள்ள இந்தியா கூட்டணி சார்பில்(மகாராஷ்டிரா விகாஸ் அகாடி) முதல்வர் வேட்பாளராக தன்னை நிறுத்த உத்தவ் தாக்கரே ஆதரவு கோரியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த சந்திப்பு பற்றி உத்தவ் தாக்கரே கூறுகையில்,’ நான் சிறப்பாக பணியாற்றியதாக எனது சகாக்கள் (இந்தியா கூட்டணி தலைவர்கள்) உணர்ந்தால், உத்தவை முதலமைச்சராக்க விரும்புகிறீர்களா என்று அவர்களிடம் கேளுங்கள். மேலும் இதைப்பற்றி மக்கள் முடிவு செய்வார்கள். முதலமைச்சராக வேண்டும் என்று நான் கனவிலும் நினைத்ததுமில்லை, ஆசைப்பட்டதும் இல்லை. ஆனால், பொறுப்பில் இருந்து தப்பிச் செல்பவன் அல்ல. அந்த பொறுப்பை ஏற்று எனது திறமையை சிறப்பாக வழங்க முயற்சித்தேன்’ என்றார். இன்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாகாந்தியையும் சந்தித்து பேச உள்ளார்.
சென்னை: இந்தியாவின் மிக பழமையான நகரமாக மதுரை திகழ்கிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மாபெரும் பண்பாட்டு விழாவாக மதுரை சித்திரை திருவிழா நடைபெறுகிறது. மாமதுரையை போற்றும் விழா இன்று தொடங்கி 11-ம் தேதி வரை நடைபெறுகிறது. மாமதுரை விழாவின் தொடக்க நிகழ்ச்சியில் காணொலிக்காட்சி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது; திங்களைப் போற்றுதும்… திங்களைப் போற்றுதும்… ஞாயிறு போற்றுதும்… ஞாயிறு போற்றுதும்… மாமழை போற்றுதும்… மாமழை போற்றுதும் என்று சிலப்பதிகாரம் தீட்டிய இளங்கோவடிகள் எழுதினார்.
இப்போது, “மா மதுரை போற்றுவோம்! மா மதுரை போற்றுவோம்!”-என்று வேள்பாரி தீட்டிய எழுத்தாளர் சு.வெங்கடேசன் எம்.பி அவர்கள் நிகழ்ச்சியை நடத்துகிறார். எல்லாருக்கும் அவர் அவர்களின் ஊர் பெருமைக்குரியதுதான்; போற்றுதலுக்குரியதுதான். அதிலும் குறிப்பாக, மதுரை மாநகர் என்பது பல்வேறு வரலாற்றுப் பெருமைகளைக் கொண்டது என்று நான் அதிகம் விளக்கத் தேவையில்லை. இந்தியாவின் பழமையான நகரங்களில் ஒன்று மதுரை, இரண்டாயிரம் ஆண்டு வரலாறு கொண்டது மதுரை, பாண்டிய மன்னர்கள் தலைநகராக ஆட்சி செய்த நகரம், ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியப் பாண்டியன் ஆட்சி செய்த நகரம்.
“தவறு செய்தவன் மன்னனே ஆனாலும்” மன்னனைக் கண்ணகி கேள்வி கேட்ட மண் இது. நீதியைக் காக்க தன்னுடைய உயிரையே தந்த மன்னர் ஆட்சி செய்த இடம் இது. திருமலை நாயக்கரும், ராணி மங்கம்மாளும் ஆண்ட பூமி இது. புகழ்பெற்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் இருக்கும் கோயில் நகரம் இது. அனைத்துக் கலைகளும் ஒருங்கே இருக்கும் பண்பாட்டுச் சின்னமாக இந்தக் கோவில் கருதப்படுகிறது. புகழ்பெற்ற சித்திரைத் திருவிழா, மாபெரும் பண்பாட்டு விழாவாக இது நடைபெற்று வருகிறது. 1866-ஆம் ஆண்டே நகராட்சியாக ஆன ஊர் இது. சென்னைக்கு அடுத்ததாக இரண்டாவது மாநகராட்சியாக 1971-ஆம் ஆண்டு மதுரையைதான் மாநகராட்சி ஆக்கினார் அன்றைய முதலமைச்சர் தலைவர் கலைஞர். அண்ணல் காந்தி அவர்கள் தன்னை அரையாடை மனிதராக மாற்றிக்கொண்ட இடமும் இந்த மதுரை தான்.
ஏன் என்னுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய தி.மு.க. இளைஞரணி தொடங்கப்பட்டதும் இந்த மதுரை மண்ணில் இருந்துதான். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். அதனால்தான், பல்வேறு வரலாற்றுப் பெருமைகளைக் கொண்ட நகரம் என்று மதுரையை, குறிப்பிட்டேன். இத்தகைய மதுரையை மதுரைக்காரர்கள் மட்டுமல்ல; எல்லோரும் போற்றலாம்; மதுரையைப் போற்றுவோம் என்று கொண்டாடலாம்! நம்முடைய திராவிட மாடல் அரசில் மதுரை மாவட்டத்திற்கு இரண்டு அமைச்சர்களை வழங்கியிருக்கிறோம். தங்களின் சிறப்பான செயல்பாடுகளால் இரண்டு பேரும் மதுரைக்கும், நம்முடைய அரசுக்கும் பெருமை சேர்த்துக்கொண்டு இருக்கிறார்கள். 2013-ஆம் ஆண்டு முதல் ‘மா மதுரை போற்றுவோம்’ விழா நடந்துக்கொண்டு இருக்கிறது.
சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளரும், மதுரை நாடாளுமன்ற உறுப்பினருமான சு.வெங்கடேசன் அவர்களின் முயற்சியால் இது தொடங்கப்பட்டது. விழாக்குழு தலைவராக மதுரை தியாகராசர் குழுமத் தலைவர் திரு. கருமுத்து தி. கண்ணன் அவர்களையும், விழாக்குழு துணைத் தலைவராக மதுரை அபராஜிதா குழுமத் தலைவர் முனைவர் பரத் கிருஷ்ணன் சங்கர் அவர்களையும் கொண்டு இந்த விழாக்கள் ஆண்டுதோறும் சிறப்பாக நடந்து கொண்டு வந்தது. வரலாற்றைப் போற்றுவோம், வைகையைப் போற்றுவோம், மாமதுரையைப் போற்றுவோம் போன்ற தலைப்புககளில் இது நடந்துக்கொண்டு வருகிறது. இந்த விழா நடக்கும் நாட்களில் மதுரை மாநகர் புத்துயிர் பெறுகிறது என்றே சொல்லலாம்.
வைகை தொடங்கும் இடத்திலிருந்து, அது கடலில் கலக்கும் இடம் வரைக்குமான ஆற்றின் பாதை, அதன் கரைகளில் அமைந்திருக்கும் ஊர்கள் ஆகியவற்றின் மாதிரி, வைகை ஆற்றுக்குள் வடிவமைக்கப்பட்டு இருந்தது. காலந்தோறும் மதுரை நகரம் மாறிய காட்சி ஓவியமாகவும், மாதிரி நகரமாகவும் கண்காட்சியாக தமுக்கம் திடலில் அமைக்கப்பட்டிருக்கும். மதுரை பிரமுகர்களின் படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும். பள்ளி, மாணவ மாணவியருக்கு போட்டிகள் நடத்தப்பட்டது. கருத்தரங்குகள், கலைநிகழ்ச்சிகள், ஊர்வலம், வாணவேடிக்கை ஆகியவை நடத்தப்படுகிறது. இருபுறமும் விளக்குகள் ஏந்தி பொதுமக்கள் நிற்கிறார்கள்.
சிலப்பதிகாரத்தில் சொல்லப்பட்ட ‘இந்திர விழா’ போல இவை நடத்தப்படுவதை அறிந்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். இதேபோல், இந்த ஆண்டும் மாமதுரை போற்றும் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இன்று தொடங்கி 11-ஆம் தேதி வரை இந்த விழாவை ஏற்பாடு செய்திருக்கிறீர்கள். மதுரை நகரத்தின் மரபையும், பண்பாட்டையும் கொண்டாடும் பெருவிழாவாக இதை நடத்திக்கொண்டு வருகிறீர்கள். இந்த ஆண்டு மதுரை போற்றும் விழாவை ஆர்வத்துடன் முன்னெடுத்துச் செல்லும் இந்திய தொழில் கூட்டமைப்பான C.I.I. அமைப்புடன் இளையோர் அமைப்பான “யங் இந்தியன்ஸ்” அமைப்பை பாராட்டுகிறேன். ஊரைப் போற்றும் இளைஞர்களாக நீங்கள் வளர்வது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.
ஊரைப் பாதுகாக்க வேண்டும். அதன் பழமை மாறாமல் பாதுகாக்க வேண்டும். அதே நேரத்தில் நவீன வசதிகள் எல்லாவற்றையும் ஏற்படுத்தியும் தர வேண்டும். பழமைக்கு பழமையாக, புதுமைக்கு புதுமையாக இளைஞர்கள் இயங்க வேண்டும். பொழுதுபோக்கு விழாவாக இல்லாமல், பண்பாட்டுத் திருவிழாவாக இதை நீங்கள் நடத்திக்கொண்டு வருவது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. தமிழ் மொழி, தமிழ் இனம் என்ற பெருமையும் பெருமிதமும் உள்ளவர்களாக எதிர்காலத் தலைமுறை வளர வேண்டும். இது போன்ற விழாக்கள் கூட்டுறவு எண்ணத்தையும், ஒருங்கிணைந்து செயல்படவேண்டும் என்ற உணர்வையும் உருவாக்கும். சாதி, மத வேறுபாடுகளுக்கு இடமளிக்காமல், இதுபோன்ற பண்பாட்டு விழாக்களை எல்லோரும் கொண்டாட வேண்டும். மனிதநேயம் போற்றுவோம்! மக்கள் ஒற்றுமை போற்றுவோம்! என்ற அடிப்படையில் இது போன்ற விழாக்கள் மாநிலம் முழுவதும் நடைபெற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
புது தில்லி: முழு நாடும் உங்களுடன் நிற்கிறது என்று இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்துக்கு, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆறுதல் கூறியிருக்கிறார்.
பாரீஸ் ஒலிம்பிக், மகளிருக்கான மல்யுத்தப் போட்டியல், 50 கிலோ எடைப்பிரிவின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருந்த இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக ஒலிம்பிக் அமைப்பு அறிவித்தது.
50 கிலோ எடைப்பிரிவில் போட்டியிட வேண்டிய வீராங்கனை, கூடுதலாக 100 கிராம் எடை அதிகமாக இருந்ததால் அவர் தகுதி நீக்கம் செய்யப்படுவதாக அறிவித்திருந்தது இந்தியர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில், வினேஷ் போகத்துக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் தனது ஆதரவை அளிக்கும் வகையில், தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், உலக சாம்பியன்களான மல்யுத்த வீராங்கனைகளை தோற்கடித்து இந்திய வீராங்கனை வினேஷ் போகத் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று நாட்டுக்கு பெருமைசேர்த்த நிலையில், அவர் சில காரணங்களால் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது.
ஒலிம்பிக் அமைப்பின் இந்த முடிவை இந்திய ஒலிம்பிக் சங்கம் கடுமையாக எதிர்த்து நாட்டின் மகளுக்கு நீதி வழங்கும் என்ற முழு நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.
இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், மனம் தளரக்கூடியவர் அல்ல என்பது தெரியும், அவர் இன்னும் வலுவாக களம் திரும்புவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.
வினேஷ் போகத், நீங்கள் எப்போதும் நாட்டுக்கு பெருமை சேர்த்திருக்கிறீர்கள். இன்றும் உங்கள் பலமாக முழு நாடும் உங்களுடன் நிற்கிறது என்று பதிவிட்டுள்ளார்.
இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பு இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், பாரீஸ் ஒலிம்பிக் போட்டியின் மகளிருக்கான மல்யுத்தப் போட்டி 50 கிலோ எடைப் பிரிவில் வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக வெளியான தகவல் வருத்தத்தை அளிக்கிறது, இரவு முழுவதும் இந்தியக் குழுவினர் எடுத்த கடுமையான முயற்சிகளுக்குப் பிறகும், இன்று காலை 50 கிலோவுக்கும் கூடுதலாக சில கிராம் எடை கூடியிருக்கிறது. இது குறித்து இந்திய குழு வேறு எந்த கருத்துகளையும் பகிர்ந்துகொள்ளவில்லை. வினேஷ் போகத்தின் தனியுரிமையை மதிக்குமாறு இந்திய குழு கேட்டுக்கொண்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த 30ஆம் தேதி கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. முண்டக்கை, சூரல்மலை உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட கடும் நிலச்சரிவில் சிக்கி 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் நிலச்சரிவால் குடும்பத்தினரை இழந்தவர்களுக்கு மட்டுமல்லாது மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வரும் பணியாளர்களுக்கும் மாநில அரசு சார்பில் மன நல ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு, மேற்கு வங்கம், ஆந்திரா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த பலரும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். வயநாட்டில் நிலச்சரிவு பாதிப்புகளை நேரில் பார்வையிட்ட மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இதனை தேசிய பேரிடர் அறிவிக்க வேண்டும் என தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், முன்னாள் மத்திய இணையமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான வி.முரளீதரன் ஃபேஸ்புக்கில் ஆக. 4ம் தேதி வெளியிட்ட பதிவில் வயநாடு நிலச்சரிவை தேசியப் பேரிடராக அறிவிக்க இயலாது என பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என மீண்டும் மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் இன்று வலியுறுத்தினார். மேலும், நிலச்சரிவால் தங்களது உடைமைகள் மற்றும் வீடுகளை இழந்த மக்களுக்கு உரிய இழப்பீடு அளிக்க வேண்டும். வயநாடு நிலச்சரிவு பதிப்பு குறித்து உறுதுணையாக ஆதரவளித்து அனைத்து மக்களவை உறுப்பினர்களுக்கு நன்றி. எனவும் மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசினார்.
சென்னை: தமிழ்நாடு அடைந்த முன்னேற்றங்களை பட்டியலிட்டு வரலாற்றை சொன்னால் கலைஞர் பெயர் உயர்ந்து நிற்கும்; உயிரென நிற்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முத்தமிழறிஞர் கலைஞரின் 6-ம் ஆண்டு நினைவு நாள் இன்று (07.08.2024) அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு திமுகழகம் சார்பில் கலைஞரின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் கலைஞர் செயலாற்றிய திட்டங்களால் பயன்பெற்ற பல்வேறு தரப்பினரும் தங்கள் நன்றியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கலைஞரின் நினைவு நாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்; தமிழ்நாடு அடைந்துள்ள முன்னேற்றங்களையெல்லாம் பட்டியலிட்டு – அதன் வரலாற்றைச் சொன்னால், தலைவர் கலைஞர் பெயர் உயர்ந்து நிற்கும்; உயிரென நிற்கும். ஆறாத வடுவென – ஆற்றுப்படுத்த முடியாத துயரென அவர் நம்மைப் பிரிந்து ஆண்டுகள் ஆகிவிட்டது ஆறு. இந்நாளில் அண்ணனின் அருகில் அவர் ஓய்வுகொண்டிருக்கும் கடற்கரைக்கு உடன்பிறப்புகள் சென்று, “அவர் காட்டிய வழிதனில் – அவர் கட்டிய படை பீடுநடை போடும்; தமிழும் தமிழ்நாடும் அவனிதனில் உயர்ந்து விளங்கப் பாடுபடும்!” என உறுதியெடுத்து உரமூட்டிக் கொண்டோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
டெல்லி: காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு அழகிய காலணிகளை தைத்து அனுப்பிய தொழிலாளி ராம்சேட்டுக்கு தொலைபேசியில் நன்றி தெரிவித்தார்.
கடந்த 2018-ம் ஆண்டு கா்நாடக சட்டசபைத் தோ்தல் பிரசாரத்தின்போது அமித்ஷா கொலை வழக்கின் குற்றவாளி என ராகுல் காந்தி கருத்து தெரிவித்தாா். இதையடுத்து ராகுல் காந்தி மீது உத்தரபிரதேச மாநில பாஜக தலைவர் விஜய் மிஸ்ரா, சுல்தான்பூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்காக ஜூலை 26ம் தேதி சுல்தான்பூருக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வந்திருந்தார்.
அப்போது சுல்தான்பூரில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக செருப்பு தைக்கும் தொழிலாளி ராம்சேட்டை சந்தித்து பேசினார். அவரின் வேலைகள் அன்றாடம் அவர் சந்திக்கும் சவால்கள் குறித்து அவரிடம் ராகுல் காந்தி கேட்டறிந்தார். இதனைக் கேட்ட ராகுல் காந்தி அந்த தொழிலாளிக்கு உதவ எண்ணினார். அதன்படி அவருக்கு புதிதாக தையல் மெஷின் ஒன்றை பரிசாக மறுநாள் வழங்கி உள்ளார். இதனை கண்ட அந்த தொழிலாளியின் கண்களில் ஆனந்த கண்ணீர் வந்தது. இதைத் தொடர்ந்து அவர் மகிழ்ச்சியில் இனி கைகளில் செருப்புகளை தைக்க தேவை இல்லை என்று கூறினார். மேலும் அவரிடம் உரையாடிய ராகுல் காந்தி, செருப்பு தைக்கவும் கற்றுக் கொண்டார்.
இதையடுத்து, ராகுல் காந்தி தனது கைகளால் தைத்த காலணிகளை ஒரு கோடி ரூபாய் கொடுத்தாலும் தரப்போவதில்லை என்று தெரிவித்து இருந்த ராம்சேட் என்ற ராகுல் காந்திக்கு 2 ஜோடி காலணிகளை பரிசாக அனுப்பி வைத்தார். ராம்சேட் பாசமாக அனுப்பிய காலணிகளை ராகுல் காந்தி அணிந்து கொண்டுள்ளார். எனக்காக அழகான காலணிகளை தைத்து அனுப்பியுள்ளீர்கள் என தொலைபேசி வாயிலாக அவருக்கு ராகுல்காந்தி நன்றி ராம்சேட்டுக்கு நன்றி கூறி உற்சாகமாக உரையாடினார்.
இந்த நெகிழ்ச்சியான வீடியோவை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி;
உழைக்கும் குடும்பங்களின் ‘பாரம்பரிய திறன்களில்’ இந்தியாவின் மிகப்பெரிய செல்வம் உள்ளது.
சமீபத்தில், சுல்தான்பூரில் இருந்து திரும்பும் போது, ஷூ கைவினைஞர் ராம்செட் ஜியை சந்தித்தேன், அவர் தனது சொந்த கைகளால் செய்யப்பட்ட மிகவும் வசதியான மற்றும் சிறந்த ஷூவை எனக்கு அன்புடன் அனுப்பினார்.
நாட்டின் மூலை முடுக்கிலும் பல்வேறு திறமைகளைக் கொண்ட கோடிக்கணக்கான திறமைசாலிகள் உள்ளனர். இந்த ‘பில்டர்ஸ் ஆஃப் இந்தியா’ அவர்களுக்குத் தேவையான ஆதரவைப் பெற்றால், அவர்கள் தங்கள் சொந்த விதியை மட்டுமல்ல, நாட்டின் விதியையும் மாற்ற முடியும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.