பி.வி.பி கல்லூரி குழுமத்தின் சேர்மன் டாக்டர் “பண்ணை செல்வகுமார் புதுமை பெண் விருதை வழங்கி பாராட்டினார்
மதுரை, ஏப்ரல்.02-
மதுரை வில்லாபுரத்தில் ஆதிநாகசக்தி அம்மன் திருக்கோவில் அறக்கட்டளை சார்பாக மகளிர் தின விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இதில் பல்வேறு சாதனைகளை செய்த பெண்மணிகளை கவுரவப்படுத்தும் விதமாக “புதுமை பெண் விருது” மற்றும் பள்ளி கல்லூரி மாணவிகளுக்கான “சாதனை மாணவி விருதுகள்” வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பி.வி.பி கல்லூரி குழுமத்தின் சேர்மன் டாக்டர் “பண்ணை செல்வகுமார்” விருதுகளை வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அறக்கட்டளை மேனேஜிங் டிரஸ்டி டாக்டர் நளினி செய்திருந்தார்.
தூத்துக்குடி: தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழியின் வாகனத்தை தேர்தல் பறக்கும் படையினர் வழிமறித்து சோதனை நடத்தினர்.
தூத்துக்குடி மக்களவை தொகுதியில் தேர்தல் நடத்தை விதிகளை கண்காணிக்கும் வகையில் 6 சட்டப்பேரவை தொகுதிகளிலும் 54 பறக்கும் படை குழுக்கள், 54 நிலையான கண்காணிப்பு குழுக்கள், 6 வீடியோ கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இக்குழுவினர் தொகுதி முழுவதும் 24 மணி நேரமும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சோதனையின் போது உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தூத்துக்குடி 3-வது மைல் அருகே புள்ளியியல் துறை உதவி இயக்குநர் ஸ்மிருதி ரஞ்சன் பிரதான் தலைமையில், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ஞானகுரு மற்றும் போலீஸார் அடங்கிய பறக்கும் படை குழுவினர் நேற்று மாலை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது தூத்துக்குடி மக்களவை தொகுதி திமுக வேடபாளரும், அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளருமான கனிமொழி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்வதற்காக தூத்துக்குடியில் இருந்து காரில் புறப்பட்டு, அந்த வழியாக வந்தார்.
அவரது காரையும் தேர்தல் பறக்கும் படையினர் வழிமறித்து, முழுமையாக சோதனை செய்தனர். சோதனைக்கு கனிமொழி முழுமையாக ஒத்துழைத்தார். அவரது காரில் பணமோ, பொருட்களோ எதுவும் இல்லை. தீவிர சோதனைக்கு பிறகு அவர் திருநெல்வேலிக்கு புறப்பட்டு சென்றார்.
சென்னை: தமிழ்நாட்டை ஏமாற்றிய மோடி, இப்போது தமிழையே ஏமாற்றப் பார்க்கிறார் என முரசொலி குற்றம் சாடியுள்ளது.
இது தொடர்பாக இன்று வெளியிடப்பட்டுள்ள முரசொலி தலையங்கத்தில் ‘தாய்மொழி தமிழ்மொழியாக இல்லையே என்று வருத்தப்படுகிறேன்’ என்று பிரதமர் சொல்லி இருப்பதைப் பார்க்கும்போது புல்லரிக்கிறது. சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்கு ரூ.1500 கோடி ஒதுக்கும் மோடி, தமிழ் வளர்ச்சிக்கு ரூ.67 கோடிதான் ஒதுக்கி இருக்கிறார். அப்போது எங்கே போனது தமிழ்ப் பாசம்? 2008ம் ஆண்டு நடந்த செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் அலுவலகத் திறப்பு விழாவில் பேசிய கலைஞர் அவர்கள் மகத்தான அறிவிப்பு ஒன்றைச் செய்தார்கள். “150 ஆண்டுகளுக்கு முன்பு கண்ட கனவு, அந்த கனவு நினைவாக வேண்டும் என்று 50 ஆண்டுகளுக்கு முன்பே நான் கொண்ட நினைவு.
செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் காலூன்றுகின்ற இந்த இனிய நாளில் எனக்கென்று உள்ள சொந்த பணத்திலிருந்து ஒரு கோடி ரூபாயை நிறுவனத்தின் பொறுப்பில் கலைஞர் கருணாநிதி செம்மொழி அறக்கட்டளை ஒன்றினை நிறுவிட வழங்குகிறேன்” என்றும் பெருமிதத்துடன் குறிப்பிட்டார். ‘கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் அறக்கட்டளை’ வாயிலாக ஆண்டுதோறும் தகுதி வாய்ந்த தமிழறிஞருக்குக் ‘கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது’ வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருது இந்தியாவிலேயே மிக உயரிய அளவில் ரூ.10 லட்சம் பரிசுத் தொகையும், பாராட்டிதழும், கலைஞரின் உருவம் பொறித்த நினைவுப் பரிசும் அடங்கியதாகும்.
முதல் விருது 2010, ஜூன் 23 அன்று கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் அன்றைய குடியரசுத் தலைவர் அவர்களால் பின்லாந்து நாட்டைச் சேர்ந்த ‘பேராசிரியர் அஸ்கோ பர்ப்போலா’ அவர்களுக்கு வழங்கப்பட்டது. 2011 முதல் 2019ம் ஆண்டு வரையிலான விருதுகள் வழங்கப்படவே இல்லை. பத்து ஆண்டுகள் அந்த விருதை யாருக்கும் வழங்கவே இல்லை. கழக அரசு பொறுப்பேற்றவுடன் விருதாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு 22.01.2022 அன்று நடைபெற்ற விழாவில் பரிசுகள் அளிக்கப்பட்டன. அப்போதெல்லாம் மோடியின் தமிழ்ப் பாசம் எங்கே போனது?
ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் அமைக்கப்பட்டுள்ள ஆட்சி மொழிக்கான நாடாளுமன்ற நிலைக்குழு, மொத்தம் 112 பரிந்துரைகள் கொண்ட 11ஆவது அறிக்கையை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி இருக்கிறது. ஆட்சி மொழி எனும் பெயரால் முழுக்க முழுக்க இந்தி மொழியை வலிந்து திணிப்பதற்கான பரிந்துரைகளையே இவர்கள் அளித்திருக்கிறார்கள்.
* கல்வி நிறுவனங்களில் பயிற்று மொழியாக இந்தி நிச்சயம் இடம் பெற வேண்டும்.
* கல்லூரிகளில் ஆங்கிலத்துக்குப் பதில் இந்தியைக் கொண்டு வரவேண்டும்.
* போட்டித் தேர்வுகளில் கட்டாய ஆங்கில மொழி வினாத்தாள் நிறுத்தப்பட வேண்டும்.
* இந்தியில் பணிபுரியாத அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் எச்சரிக்கப்பட வேண்டும்.
* ஒன்றிய அரசின் பணியாளர் தேர்வில் தேர்வாளர்களின் இந்தி மொழி அறிவை உறுதி செய்ய வேண்டும்.இப்படி இந்திய மயமாகவே இருக்கிறது அந்த அறிக்கை. அப்போது மோடியின் தமிழ்ப் பாசம் எங்கே போனது?
தமிழ் -ஆங்கிலம் என்ற இருமொழிக் கொள்கை கொண்டதாக தமிழ்நாடு இருக்கிறது. இதில் இந்தியைப் புகுத்தி மும்மொழிக் கொள்கை மாநிலமாக ஆக்கப் பார்க்கிறார்கள். அதற்காகத்தான் புதிய கல்விக் கொள்கையைக் கொண்டு வருகிறார்கள். புதிய கல்விக் கொள்கையில் முடிந்த இடத்தில் எல்லாம் சமஸ்கிருத மொழியைத் திணிக்கிறார்கள்.
* சமஸ்கிருதம், மும்மொழிப் பாடத்திட்டத்தின் ஒரு மொழியாகப் பள்ளிக் கல்வித் திட்டத்தின் எல்லா நிலைகளிலும், கல்லூரிகளிலும் ஒரு முக்கியமான வளமூட்டக் கூடிய விருப்பப் பாடமாக வழங்கப்படும்.
* மொழிச் சுவையுடனும், அனுபவப் பூர்வமாகவும் மட்டுமல்லாமல் தற்காலத்திற்குப் பொருந்தும் வகையில் சமஸ்கிருத ஞான மரபுகளின் வழியில் முக்கியமாக ஒலிப்பு மற்றும் உச்சரிப்பு முறைகளின் மூலம் கற்பிக்கப்படும். ஆரம்ப மற்றும் இடைநிலை சமஸ்கிருதப் பாடப் புத்தகங்கள் எளிய தரமான சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்டு, மாணவர்கள் உண்மையிலேயே அனுபவித்துக் கற்கும் வண்ணம் சமஸ்கிருத மொழியின் மூலமே கற்பிக்கப்படும்.
* ஒன்றிய அரசு நடைமுறைப்படுத்தும் மும்மொழிக் கொள்கையில் சமஸ்கிருத மொழி ஒருபாடமாக்கப்பட்டு பள்ளி மற்றும் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு முக்கிய திறன் வளர்ப்பு விருப்பப் பாடமாக அளிக்கப்படும்.
* சமஸ்கிருத பாடப்புத்தகங்கள் அதிகமாக உருவாக்கப்படும்.
* சமஸ்கிருத துறைகள் மூலமாக சமஸ்கிருதம் பற்றியும் சமஸ்கிருத அறிவு முறைகள் (Sanskrit Knowledge System) பற்றியும் மிகச் சிறந்த இடைநிலை (Inter Disciplinary) ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படும்.
* உயர்கல்வித் துறையில் முழுமையான பல்துறை (Holistic Multidisciplinary) பயிற்று மொழியாக சமஸ்கிருதம் விளங்கும். நாடு முழுவதும் அதிக எண்ணிக்கையில் உள்ள சமஸ்கிருத ஆசிரியர்கள் பாடப் புலமை பெற்றவர்களாக (Professionalized) ஆக்கப்படுவார்கள்.
– இப்படி இந்து – சமஸ்கிருத திணிப்பாக உருவாக்கப்பட்டது தான் புதிய கல்விக் கொள்கை ஆகும். மோடியின் தமிழ்ப்பாசம் எங்கே போனது?
ஆங்கிலத்தை அகற்றி விட்டு அந்த இடத்தில் இந்தியை உட்கார வைப்பதும், இந்தியை உட்கார வைத்த இடத்தில் சமஸ்கிருதத்தை உட்கார வைப்பதும்தான் அவர்களது நோக்கம். இவ்வளவு தமிழ்ப் பாசம் இருக்கும் பிரதமர் மோடி, தமிழ் மொழியை இந்திய அரசின் ஆட்சிமொழிகளில் ஒன்றாக ஏற்பாரா? மாநில ஆட்சி மொழிகள் அனைத்தும் இந்திய அரசின் ஆட்சிமொழியாக ஆக்குவாரா? தமிழகத்தில் இயங்கும் ஒன்றிய அரசின் அலுவலகங்களில் இணை அலுவல் மொழியாக தமிழை அங்கீகரித்து, அனைத்து அலுவலகச் செயல்பாடுகளும் தமிழிலேயே இயங்க உரிய சட்டத் திருத்தம் செய்ய முன் வருவாரா? சென்னை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக தமிழை ஆக்க முயற்சிப்பாரா? இதையெல்லாம் செய்து விட்டு தமிழைப் பற்றி பேசவும். தமிழை ஏமாற்ற வேண்டாம் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
மதுரையில் பிரவேசி ஒர்க்கர்ஸ் சார்பாக பாஜக வேட்பாளர் அறிமுக கூட்டம் மற்றும் வாக்கு சேகரிக்கும் நிகழ்ச்சி காமராஜர் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு பிறமொழி பிரிவு மாநில செயலாளர் கன்பத்லால் தலைமை தாங்கினார். தமிழ் இலக்கியம் மற்றும் தமிழர் நலன் பிரிவு மாநில செயலாளரும், மதுரை பெருங்கோட்ட பொறுப்பாளருமான டி.எஸ்.கே ஞானேஸ்வரன் வரவேற்று பேசினார்.
பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்க பெருமாள் வேட்பாளர் பேராசிரியர் இராமஸ்ரீநிவாசனை அறிமுகப்படுத்தி பேசினார்.நகர் மாவட்ட தலைவர் மகா.சுசீந்திரன் சிறப்புரையாற்றினார்.
இதில் மாநில செயற்குழு உறுப்பினர் கே.கே.சீனிவாசன், மாநில பொதுக்குழு உறுப்பினர் பாலமுருகன், மண்டல் தலைவர் மணிமாறன், நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் தற்காலிகமாக நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் பள்ளி இறுதி நாள் வரை பணிபுரிய வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து தருமபுரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:
பள்ளிக் கல்வித்துறை கட்டுப்பாட்டின் கீழ் வரும் நகராட்சி / அரசு உயர், மேல்நிலை பள்ளிகளில் 2023- 2024ஆம் கல்வியாண்டில் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் மற்றும் முதுகலை ஆசிரியர்காலிப் பணியிடங்களை நேரடி நியமனம், பதவி உயர்வு மூலம் நிரப்பும் வரை பள்ளி மேலாண்மை குழு மூலமாக தகுதி வாய்ந்த தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.
ஆசிரியர்கள் நியமிக்கப்படும் வரை தற்காலிக ஆசிரியர்கள் பணி
இந்நேர்வில், பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் உயர்நிலை , மேல்நிலை பள்ளிகளில் 2023-2024ஆம் கல்வியாண்டில் காலிப்பணியிடங்கள், பணியில் உள்ள ஆசிரியர்கள் மகப்பேறு விடுப்பில் சென்றதால் ஏற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு பள்ளி மேலாண்மைக்குழு மூலம் தற்காலிக இடைநிலை, பட்டதாரி, முதுகலை ஆசிரியர்கள் நியமனம் செய்து சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர் மூலம் ஆணை வழங்கப்பட்டது.
பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில் தெரிவிக்கப்பட்ட அறிவுரைகளின்படி, பள்ளி (மேலாண்மைக்குழு மூலம் நியமனம் செய்யப்பட்ட தற்காலிக இடைநிலை, பட்டதாரி, முதுகலை ஆசிரியர்களுக்கான பள்ளி இறுதி வேலை நாள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, பள்ளி மேலாண்மைக்குழு மூலம் நியமனம் செய்யப்பட்ட தற்காலிக இடைநிலை, பட்டதாரி, முதுகலை ஆசிரியர்களுக்கான பள்ளி இறுதி வேலை நாள் கீழ்க்கண்டவாறு, சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.
பள்ளி மேலாண்மைக்குழு மூலம் நியமனம் பள்ளி இறுதி செய்யப்பட்ட தற்காலிக ஆசிரியர்கள்
முதுகலை ஆசிரியர்கள்- 25.03.2024 வரை (மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வு இறுதி நாள்) பள்ளி இறுதி வேலை நாளாக இருக்கும்.
அதேபோல இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் – 2023- 2024 ஆம் கல்வியாண்டில் பள்ளியின் இறுதி வேலை நாளாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோடை விடுமுறை எப்போது?
முன்னதாக ஏப்ரல் 12ஆம் தேதியோடு 1 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான தேர்வுகள் முடிந்து, பள்ளி இறுதி வேலை நாளாக இருக்கும் என்றும் ஏப்ரல் 13 முதல் கோடை விடுமுறை தொடங்கும் என்றும் பள்ளிக் கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, முன்கூட்டியே தேர்வுகள் முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் கோடை விடுமுறையும் முன்கூட்டியே தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விசாகப்பட்டினம் : டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணியின் தோல்வி உறுதி என்றே தெரிந்தே தான் தோனி களமிறங்கியதாக முன்னாள் வீரர் அம்பாதி ராயுடு தெரிவித்துள்ளார்.
17வது சீசனுக்கான ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி முதல் தோல்வியை டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் பதிவு செய்துள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி அணி ரிஷப் பண்ட் மற்றும் டேவிட் வார்னரின் அதிரடியால் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 191 ரன்கள் குவித்தது. இதன்பின் களமிறங்கிய சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 171 ரன்களை சேர்த்து தோல்வியடைந்தது.
இருப்பினும் கடந்த 2 போட்டியில் சிஎஸ்கே அணி பெற்ற வெற்றியை விடவும், இந்த போட்டியில் சென்னை அணி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. ஏனென்றால் சிஎஸ்கே அணியின் தல தோனி, 307 நாட்களுக்கு பின் மீண்டும் சிஎஸ்கே அணிக்காக மஞ்சள் ஜெர்சியில் களமிறங்கி ருத்ர தாண்டவம் ஆடியுள்ளார். இதனால் தோல்வியை பற்றி கூட சிந்திக்காமல் சிஎஸ்கே அணி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில் தோனியின் ஆட்டம் குறித்து சிஎஸ்கே முன்னாள் வீரர் அம்பாதி ராயுடு பேசுகையில், தோனியின் இந்த ஆட்டத்திற்கு பின் எனக்கு சில விஷயங்கள் தோன்றுகிறது. இனிமேல் தோனி நம்பர் 8ல் களமிறங்க மாட்டார் என்று தோன்றுகிறது. நிச்சயம் நம்பர் 6ல் களமிறங்க அதிக வாய்ப்புகள் உள்ளது. அவர் களமிறங்கும் போது ஆட்டம் கைமீறி போய்விட்டது என்று நிச்சயம் புரிந்திருக்கும்.
அதனால் தோனி இந்த போட்டியை பயிற்சி களமாகவே பார்த்திருப்பார். ஏனென்றால் பிளே ஆஃப் சுற்று போட்டிகளில் இதுபோன்ற சூழல் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது என்பது தோனிக்கு நன்றாக தெரியும். அதனால் தோனி தயாராவதற்காக இந்த போட்டியை பயன்படுத்தி கொண்டுள்ளார். சிறந்த பவுலர்களுக்கு எதிரான யார்க்கர் போன்ற கடினமான பந்துகளை எதிர்கொண்டு ரன்கள் சேர்க்க முடிகிறதா என்று அவருக்கு அவரே சோதனை செய்து பார்த்திருப்பார்.
இந்த இன்னிங்ஸிற்கு பின் தோனி முகத்தில் மகிழ்ச்சியை பார்க்க முடிந்தது. நிச்சயம் அவர் நம்பிக்கை அதிகரித்திருக்கும். இந்த இன்னிங்ஸிற்கு பின் ஒவ்வொரு அணிகளும் நிச்சயம் பீதியடைந்திருப்பார்கள். கடைசி 5 ஓவர்களில் இனி தோனி வருவார் என்று அச்சம் எழுந்திருக்கும். 2005ல் இருந்து பார்த்த தோனியை மீண்டும் பார்க்க போகிறோம் என்று நிச்சயம் நினைப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.
இந்திய விமான நிலையங்களில் உள்ள பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு நாளை (02.04.2024) முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
பணி குறித்த கூடுதல் விவரங்கள்
ஜூனியர் உதவியாளர் (Architecture) – 03
ஜூனியர் உதவியாளர் (Engineering- Civil) – 90
ஜூனியர் உதவியாளர் (Engineering- Electrical) – 106
ஜூனியர் உதவியாளர் (Electronics) – 278
ஜூனியர் உதவியாளர் (Information Technology) – 13
மொத்த பணியிடங்கள் – 490
கல்வித்தகுதி:
ஜூனியர் உதவியாளர் பணியிடத்திற்கு 10 வது / 12-வது தேர்ச்சியுடன் மூன்றாண்டு பொறியியல் டிப்ளமோ படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சிவில், எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ், ஐ.டி. துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் தேர்ச்சி வேண்டும்.
Architecture பொறியியல் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
கல்வி தகுதியானது, பதவிக்கு ஏற்ப மாறுபடுகிறது, எனவே பணி குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்துகொள்ள இந்த லிங்கை . https://www.aai.aero/sites/default/files/examdashboard_advertisement/Rectt%20Advt%20%20through%20GATE%202024.pdf
வயது வரம்பு
01.05.2024-ன் அடிப்படையில் அதிகபட்ச வயது 27-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
ஊதிய விவரம்
AAI விதிமுறைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
https://www.aai.aero/en/recruitment/release/307779 – இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும்வழிமுறைகள்:
முதலில் https://www.aai.aero/en/careers/recruitment- என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
பின்னர் ‘Careers’ என்பதை .
புதிதாக தோன்றும் https://www.aai.aero/sites/default/files/examdashboard_advertisement/Rectt%20Advt%20%20through%20GATE%202024.pdf அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களை தெளிவாக படித்து தெரிந்து கொள்ளவும்.
பின் அதில் உள்ள விண்ணப்ப படிவத்தில், கேட்கப்பட்டுள்ள தகவல்களை உள்ளீடு செய்யவும்.
விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்டுள்ளவைகளுக்கு சரியான தகவல்களை பூர்த்தி செய்யவும்
பின்னர் விண்ணப்ப கட்டணத்தை செலுத்தி, விண்ணப்பத்தை சமர்பிக்க வேண்டும்.
பணி குறித்தான அறிவிக்கை இருக்கும். அதனை கிளிக் செய்து பணி குறித்து விரிவான தகவல்களை தெரிந்து கொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் காலம் – 02.04.2024
விண்ணப்பிக்க கடைசி தேதி: 01.05.2024
இந்த வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விவரங்களுக்கு https://www.aai.aero/sites/default/files/examdashboard_advertisement/Rectt%20Advt%20%20through%20GATE%202024.pdf — என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.
SBI வங்கியின் புதிய கட்டண முறைகள் ஏப்ரல் 1ஆம் தேதி இன்று முதல் அமலுக்கு வருகின்றன. அதன்படி மற்ற வங்கியின் ATM- களில் மூன்று முறை மட்டுமே இலவசமாக பணம் எடுக்க முடியும்.
எஸ்பிஐ வங்கி ஏடிஎம்களில் 5 முறை இலவசமாக பணம் எடுக்கலாம். இதற்கு மேல் மற்ற வங்கியின் ஏடிஎம்களை பயன்படுத்தினால் 20 ரூபாய் மற்றும் ஜிஎஸ்டி கட்டணமும், எஸ்பிஐ வங்கி ஏடிஎம்களுக்கு 10 ரூபாய் மற்றும் ஜிஎஸ்டி கட்டணமும் வசூலிக்கப்படும். மேலும் வங்கி கணக்கில் பணம் இல்லாமல் போனால் 20 ரூபாய் மற்றும் ஜிஎஸ்டி கட்டடம் வசூலிக்கப்படும்.
அதனைப்போலவே ஏடிஎம் அட்டையின் வருடாந்திர பராமரிப்பு கட்டணத்தை இன்று ஏப்ரல் 1 முதல் sbi வங்கி உயர்த்த உள்ளது. கிளாசிக், சில்வர் மற்றும் குளோபல் ஏடிஎம் அட்டைகளுக்கான கட்டணம் ஜிஎஸ்டி சேர்க்காமல் 125 ரூபாயிலிருந்து 200 ரூபாயாக உயர்த்தப்படுகிறது. இதே போல மற்ற அனைத்து வகை ஏடிஎம் அட்டைகளின் வருடாந்திர பராமரிப்பு கட்டணமும் ஜிஎஸ்டி இன்று 75 ரூபாய் அதிகரிக்க உள்ளது.
டெல்லி: உத்கல் தினத்தையொட்டி, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தி அவரது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது;
ஒடிசா கலாச்சார மற்றும் இயற்கை பன்முகத்தன்மை மற்றும் ஒரு பொன்னான வரலாற்றுடன் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது.
அனைத்து மாநில மக்களுக்கும் உத்கல் தின நல்வாழ்த்துக்கள். ஒடிசா மக்கள் கடின உழைப்பாளிகள், அவர்களுக்கு திறன் உள்ளது, ஆனால் வாய்ப்பு இல்லை.
மாநில இளைஞர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர், மாநிலம் முழுவதும் நீண்ட காலமாக கடுமையான ஊழலில் தவித்து வருகிறது. 2024 நம் அன்பான மாநிலத்தை இவற்றிலிருந்து வெளியே கொண்டு வந்து முன்னேற்றத்தை மீட்டெடுக்கும் நேரம்.
காங்கிரஸுடன் இணைந்து, ஒடிசாவின் பொற்காலத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் – மக்களை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும்.
மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழுக்கு தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அளித்த நேர்காணலில் கூறியதாவது:
1. சமூகநீதிக் கூட்டமைப்பு எனத் தொடங்கியது முதல், இந்த இந்தியா கூட்டணிக்கான முழு முயற்சியும் எடுத்தது நீங்கள்தான். இந்த முயற்சி முழு வெற்றி பெற்றுள்ளதாக நீங்கள் கருதுகிறீர்களா?
ஆமாம்! எனது முயற்சி வெற்றி பெற்றதாகவே கருதுகிறேன். மதச்சார்பற்ற அரசியல் கட்சிகள் இந்தியா முழுக்கவே பிரிந்து இருப்பதால்தான் பா.ஜ.க. வெற்றி பெறுகிறது. தமிழ்நாட்டில் இதனை ஒருமுகப்படுத்தியதைப் போல இந்தியா முழுமைக்கும் ஒருமுகப்படுத்த வேண்டும் என்று நான் நினைத்தேன்.
பா.ஜ.க.வை எதிர்க்கும் சில கட்சிகளுக்குக் காங்கிரசுடன் சேர்வதில் நெருடல் இருந்தது. மாநில அளவிலான பிரச்சினைகள்தான் அவை. எனவே அவற்றை ஒதுக்கி வைத்துவிட்டு அகில இந்திய அளவில் ஒற்றைச் சிந்தனையுடன் ஒரு அணியை உருவாக்க வேண்டும் என்பதை ஒன்றரை ஆண்டுகளாக நான் சொல்லி வந்தேன். மூன்றாவது அணி சாத்தியமில்லை, பா.ஜ.க.வை வீழ்த்தக் காங்கிரசையும் உள்ளடக்கிய ஒரு அணியே சரியானது என்பதை வலியுறுத்தி வந்தேன். அதுதான், ‘இந்தியா’ கூட்டணியாக உருப்பெற்றுள்ளது. இந்தியாவை இந்தியா கூட்டணி கைப்பற்றி ஆட்சியை அமைக்கும்போதும், அந்த ஆட்சி கூட்டாட்சியாக செயல்படும்போதும் எனது முயற்சி முழு வெற்றியைப் பெறும்.
2. இந்தியா கூட்டணியில் இருந்த நிதீஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் பா.ஜ.க. பக்கம் சாய்ந்தது, மமதா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் தனித்துக் களம் காண்கிறது. ஆம் ஆத்மி கட்சியும் சிக்கலில் உள்ளது. இந்தச் சூழலில் கூட்டணிக்கான வெற்றியின் மீது நம்பிக்கை உள்ளதா?
அந்தந்த மாநிலங்களின் அரசியல் சூழல்களுக்கேற்ப வியூகங்களை வகுத்து, வெற்றி வாய்ப்புள்ள கட்சிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதைத் தெரிவித்திருந்தேன். எனவே பல்வேறு மாநிலங்களில் வலுவான அணிச்சேர்க்கை நடந்துள்ளது.
நிதிஷ்குமார் இல்லாமலேயே பீகாரில் வலுவான அணி அமைந்துள்ளது. மமதா பானர்ஜி அவர்களைப் பொறுத்தவரையில் அவரது வெற்றி என்பது இந்தியா கூட்டணியின் வெற்றிதான். ஆம் ஆத்மியும் காங்கிரஸ் கட்சியும் பஞ்சாப் தவிர மற்ற மாநிலங்களில் ஒன்றாகவே போட்டியிடுகின்றன. நீங்கள் சொல்லும் தலைவர்கள் சில மாநிலங்களில் தனித்து நின்றாலும், பா.ஜ.க.வை எதிர்த்தே பரப்புரை செய்கிறார்கள். எனவே இது இந்தியா கூட்டணிக்கு வலிமையைத்தான் தருகிறது.
3. தமிழ்நாட்டுத் தேர்தல் களத்தைவிட, தேசிய அளவில் தேர்தல் நிலவரம் வேறு மாதிரியாக எப்போதுமே இருக்கும். இதை எப்படி எதிர்கொள்ளப் போகிறீர்கள்?
அப்படிச் சொல்ல முடியாது. 2004-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ‘இந்தியா ஒளிர்கிறது’ என்ற முழக்கத்துடன் மீண்டும் வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சிதான் அமையும் என்ற கருத்துக்கணிப்புகள் வெளியாகின. தேர்தல் முடிவுகளில் தி.மு.க. பங்கேற்றிருந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி இந்தியா முழுமைக்கும் மகத்தான வெற்றி பெற்று, ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அதுபோல இப்போதும் நடக்கலாம். மோடி எதிர்ப்புச் சிந்தனை என்பது தென் மாநிலங்களைப் போலவே இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் விதைக்கப்பட்டு விட்டது. கொரோனா காலத்தில் மக்களைக் கைவிட்டதும், பல நூறு கிலோ மீட்டர் தூரம் பஸ் இல்லாமல் மக்கள் நடந்து போனதும், பணமதிப்பிழப்பின் போது மக்கள் அடைந்த துன்பமும், உழவர்கள் இரண்டு ஆண்டுகளாகப் போராடுவதும், மணிப்பூர் கலவரங்களும், ஜம்மு காஷ்மீர் பிரச்சினையும், உ.பி.யில் பட்டியலின – பழங்குடியினர் தாக்கப்படுவதும், அரவிந்த் கெஜ்ரிவால் கைதும் – வட மாநில மக்கள் மனதில் மோடி மீதான கோபத்தை அதிகப்படுத்தி வருகிறது. எனவே, இங்கு மாதிரியேதான் அங்கும் ரிசல்ட் இருக்கும்; கவலைப்பட வேண்டாம்.
4. தமிழ்நாட்டில் தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணி தொகுதிப் பங்கீட்டில் விடுதலைச் சிறுத்தைகள், ம.தி.மு.க. கட்சிகளுக்கு விரும்பிய எண்ணிக்கையிலான தொகுதிகளை வழங்க முடியாததன் காரணம் என்ன?
விரும்பிய எண்ணிக்கையைக் கொடுத்ததால்தான் அவர்கள் விருப்பமுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டுள்ளார்கள். எனவே, விரும்பிய தொகுதியை வழங்க முடியவில்லை என்பதே தவறானதாகும்.
5. காங்கிரஸ், சி.பி.எம். மற்றும் ம.தி.மு.க.வுக்கு இந்த முறை தொகுதிகளை மாற்றியதற்கு சிறப்புக் காரணம் உள்ளதா?
தி.மு.க. போட்டியிட்ட தொகுதிகளும்தான் மாறி இருக்கின்றன. தோழமைக் கட்சிகளுக்கும் அவர்கள் கேட்ட தொகுதிகள், அவர்களுக்கு விருப்பமான தொகுதிகள்தான் தரப்பட்டுள்ளன.
6. எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கடந்த தேர்தலில் வெளியிட்ட தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வு, பெட்ரோல் டீசல் விலை குறைப்பு உள்ளிட்டவற்றை நீங்கள் செய்யவில்லை என தொடர்ந்து பிரச்சாரத்தின்போது குற்றம் சாட்டி வருகிறாரே? அவருக்கு உங்கள் பதில் என்ன?
இவையெல்லாம் ஒன்றிய அளவில் ஆட்சியில் இருப்பவர்கள் செய்ய வேண்டியதாகும். கடந்த ஐந்து ஆண்டுகளாக நாங்களா ஆட்சியில் இருக்கிறோம்? பழனிசாமியின் கூட்டணி ஆட்சிதானே இருந்தது? நீட் தேர்வை ரத்து செய்ய அவர் பா.ஜ.க. ஆட்சி மூலமாக என்ன செய்தார்? எதுவும் செய்யவில்லை.
நீட் விலக்கு மசோதாவை ஒன்றிய அரசு திருப்பி அனுப்பியதைக்கூட வெளியில் சொல்லாமல் மறைத்தவர்தான் பழனிசாமி. அவருக்கு இது போல கேட்கும் உரிமை இல்லை. நீட் விலக்கு சட்டமுன்வடிவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டியது ஆளுநரும், ஒன்றிய பா.ஜ.க. அரசும் என்பதையாவது பழனிசாமி அறிவாரா?
7. டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிலையில், சிறையில் இருந்தே ஆட்சி நடத்துவதாக கூறி உத்தரவுகளையும் பிறப்பித்து வருகிறார். இது பற்றிய உங்கள் கருத்து என்ன?
ஜனநாயக நெறிமுறைகளையும், அரசியல் சட்ட அமைப்பின் மாண்பினையும் சிதைக்கும் வகையில் செயல்படும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் பழிவாங்கும் நடவடிக்கையால் சிறைப்பட்டுள்ள டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அவர்கள் சிறையிலிருந்தபடியே நடத்துகின்ற மாநில உரிமைக்கான போராட்டத்தை மதிக்கிறேன். நீதி அவர் பக்கம் நிற்கும் என நம்புகிறேன்.
8. கடந்த 2019 தேர்தலில் புதுச்சேரி உட்பட 39 இடங்களில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி வென்றது. நீங்கள் எதிர்த்து விமர்சித்த கட்சிதான் ஒன்றியத்தில் ஆட்சியில் உள்ளது. வெற்றி பெற்ற 39 எம்பிக்கள் மூலம் தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன செய்ய முடிந்தது. மீண்டும் இதேபோன்ற நிலை உருவானால், உங்கள் வெற்றியின் பலன் எவ்வாறாக இருக்கும்?
மீண்டும் அதே நிலை உருவாகாது. ‘இந்தியா’ கூட்டணி ஆட்சி அமையும். எங்கள் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட பல்வேறு உறுதிமொழிகளைச் செயல்படுத்திக் காட்டுவோம்.
கடந்த ஐந்தாண்டு காலத்தில் பா.ஜ.க.வுக்கு மிகச் சரியான எதிர்க்கட்சியாகத் தி.மு.க. செயல்பட்டுள்ளது. மோடி அரசின் சர்வாதிகாரச் சட்டங்கள் அனைத்தையும் கடுமையாக எதிர்த்துள்ளோம். எதேச்சாதிகாரச் செயல்கள் அனைத்தையும் மிகக் கடுமையாக அம்பலப்படுத்தி இருக்கிறோம். மாநில உரிமைகளுக்காக உரக்க ஒலித்துள்ளோம். ஒற்றைச் சர்வாதிகார நாடாக ஆக்க நினைக்கும் அனைத்து முயற்சிகளையும் எதிர்த்துள்ளோம். இதே சிந்தனை கொண்ட கட்சிகள் அனைத்தையும் ஒன்றுதிரட்டிப் போராடி இருக்கிறோம். அரசியல் ரீதியாக மட்டுமல்ல, சமூக பொருளாதார ரீதியாக பா.ஜ.க.வின் அவலங்களை விமர்சித்துள்ளோம். இதனை பா.ஜ.க. எதிர்பார்க்கவில்லை. அதனால்தான் நாடாளுமன்றத்தில் எங்களைக் கடுமையாக பிரதமரும், உள்துறை அமைச்சரும், நிதி அமைச்சரும் தொடர்ந்து விமர்சித்துப் பேசினார்கள்.
இந்தியாவின் ஜனநாயகத்தைக் காக்கும் காவல் வீரர்களாகத் தமிழ்நாட்டில் இருந்து சென்ற ஒரே ஒருவர் தவிர அனைவரும் செயல்பட்டுள்ளார்கள். இது இந்தியாவுக்கு தி.மு.க. செய்த மாபெரும் தொண்டாகும். திமுக உறுப்பினர்களின் சிந்தனையால்தான் ‘இந்தியா’ கூட்டணியே கொள்கைக் கூட்டணியாக உருவாகி உள்ளது.
9. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் மேற்கொள்ளப்படாத வகையில் தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சியின் மிக முக்கியமான 3 சாதனைகள் என்று எதைப் பெருமையாக கூறுவீர்கள்?
* பேருந்துகளில் மகளிருக்கான விடியல் பயணம் திட்டம்,
* மாதம் 1000 ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்,
* பள்ளி செல்லும் குழந்தைகளுக்கான முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம். இந்த மூன்றும் இந்தியாவின் பிற மாநிலங்களும் பின்பற்றுகின்ற திராவிட மாடல் அரசின் முத்தான மூன்று சாதனைத் திட்டங்கள். இத்துடன் சாதனைகள் நிறைவடைந்துவிடவில்லை. நான் முதல்வன், புதுமைப் பெண், தமிழ்ப்புதல்வன், மக்களைத் தேடி மருத்துவம், இல்லம் தேடிக் கல்வி, இன்னுயிர் காப்போம், முதல்வரின் முகவரி, முதலீட்டாளர்களின் முதல் முகவரி எனக் கல்வி – மருத்துவம் – தொழில் – கட்டமைப்பு என அனைத்துத் துறைகளிலும் அனைத்து மக்களின் வளர்ச்சியையும் உள்ளடக்கிய சாதனைத் திட்டங்கள் நிறைய உள்ளன.
10. இந்தத் தேர்தலில் தமிழ்நாட்டில் கருத்துக்கணிப்புகள் தி.மு.க.வுக்குச் சாதகமாக இருப்பதாக வெளியாகும் நிலையில், வெற்றி வசமானால் உங்களிடம் இருந்து மக்கள் என்ன எதிர்பார்க்கலாம்?
வெற்றியை மக்கள் எங்களுக்கு முழுமையாக வழங்குவார்கள். நாங்கள் அவர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றுவோம்.
11. தி.மு.க. மீது வாரிசு அரசியல் குற்றச்சாட்டு பிரதமர் மோடியால் வைக்கப்படுகிறது. தி.மு.க. குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான் பெரிய பதவிகளுக்கு வரமுடியும் என்ற அவரது குற்றச்சாட்டுக்கு தங்களின் பதில் என்ன?
கேட்டுக் கேட்டு புளித்துப் போன குற்றச்சாட்டு இது. வேறு ஏதும் இருந்தால் சொல்லச் சொல்லவும்.நாங்கள் சேவை செய்யவே அரசியலுக்கு வந்துள்ளோம், ஊர் சுற்றுவதற்காக அல்ல என்று சொல்லி இருக்கிறேன். கோடிக்கணக்கான குடும்பங்களின் நலனுக்கான கட்சிதான் தி.மு.க. பா.ஜ.க.விலும் நிறைய வாரிசுகள் அரசியலுக்கு வந்துள்ளார்கள். அவர்கள் யாரையாவது பிரதமர் மோடிக்கு பிடிக்கவில்லையா? அதை அவர் நேரடியாக அவருக்குச் சொல்ல முடியாமல் இப்படி தி.மு.க.வுக்கு சொல்வதைப் போலச் சொல்கிறாரா?
12. தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் மாற்றுக் கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் ஆளுநர்கள் அரசியல் செய்கின்றனர். இதை மாற்ற என்ன முயற்சி எடுப்பீர்கள்?
ஆளுநர் என்பது நியமனப் பதவியே தவிர, அது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரப் பதவி கிடையாது. ஆளுநர்கள் மூலமாக பா.ஜ.க. அல்லாத கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் அத்துமீறுவதும், போட்டி அரசாங்கம் நடத்த நினைப்பதும் அரசியல்சட்டத்தை மீறுகின்ற செயலாகும்.
அதனால்தான், ஆளுநர் என்கிற நியமனப் பதவியே தேவையில்லை என்பதுதான் பேரறிஞர் அண்ணா காலத்திலிருந்து தலைவர் கலைஞர் காலத்திலும் தற்போதும் தி.மு.க.வின் நிலைப்பாடு. ஆனால், நடைமுறையில் ஆளுநர் பதவி நீடித்துவரும் நிலையில், ஆளுநர்களை நியமிக்கும்போது மாநில முதலமைச்சர்களின் ஆலோசனைகளைப் பெற்று நியமித்திடப் புதிய அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எனத் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அதுமட்டுமல்ல, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற அடிப்படையில், மாநில ஆளுநர்களுக்கு அதிலிருந்து விலக்கு அளிக்கும் இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 361-ஐ நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு, ஆளுநர் சட்டநடவடிக்கைக்கு உட்பட்டவர் என்ற நிலை உருவாக்கப்படும் என்றும் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் உறுதியளிக்கப்பட்டுள்ளது. அது நிறைவேற்றும்போது ஆளுநர்களின் அதிகார அத்துமீறல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.
13. தமிழ்நாட்டில் இரண்டு திராவிடக் கட்சிகள் தவிர வேறுகட்சிகள் காலூன்றிவிடக் கூடாது என அ.தி.மு.க.வின் பழனிசாமியுடன் நீங்கள் கைகோத்துச் செயல்படுவதாகக் குற்றச்சாட்டு எழுகிறதே?
பழனிசாமியின் கட்சியை நாங்கள் திராவிடக் கட்சியாக நினைப்பது இல்லை. அவர்களுக்கும் திராவிடக் கொள்கைக்கும் தொடர்பு இல்லை. பேரறிஞர் அண்ணாவுக்கும் அவர்களுக்கும் கூட எந்த தொடர்பும் இல்லை. இந்தக் கொள்கைக்கு எதிராகக் கட்சி நடத்துவதுதான் அந்தக் கூட்டம். எனவே, அவர்களோடு கை கோத்துள்ளோம் என்பது மிகத் தவறான குற்றச்சாட்டு!
தமிழ்நாடு என்பது பெரியார் மண்! சமூகநீதி மண்! தமிழன் என்ற இன உணர்வோடு மக்கள் ஒற்றுமையாக வாழும் மண்! இங்கு மக்களைப் பிளவுபடுத்தும் மதவாதம் ஒருபோதும் முளைக்காது. இதனை பா.ஜ.க. முதலில் உணரவேண்டும். என்ன செய்தாலும் தமிழ்நாட்டில் வேரூன்ற முடியவில்லையே என்ற வேதனையோடு இந்த அவதூறு கிளப்பப்படுகிறது. பருத்தி விளையும் மண்ணில் பேரிக்காய் விளையாது என்பதை பா.ஜ.க. முதலில் உணர்ந்து திருந்த வேண்டும்.
14. நீட் தேர்வில் இருந்து விலக்கு என்பது தமிழ்நாட்டின் கோரிக்கையாக மட்டுமே இருப்பதைப் பார்க்க முடிகிறது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் இந்தக் கோரிக்கை நிறைவேறுவது சாத்தியமா?
நீட் தேர்வால் மருத்துவ மாணவர்களின் கல்விக் கனவு சிதைக்கப்படுவது குறித்த விழிப்புணர்வை அனைத்து மாநிலங்களிலும் உருவாக்குவோம். பயிற்சி மையங்கள் மட்டுமே கோடிக்கணக்கில் சம்பாதிக்கப் பயன்படுகிறது. இதுதான் உண்மை.
நீட் தேர்வு என்பது தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைப்பதுடன், தமிழ்நாட்டில் உள்ள மிகச் சிறந்த மருத்துவக் கட்டமைப்பையும் சிதைக்கிறது. அதனால் அதிலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்களிக்கக் கோரி சட்டமுன்வடிவு இயற்றப்பட்டுள்ளது. இந்திய ஒன்றியத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும்போது தமிழ்நாட்டுக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்படும். அதனால் ஏற்படும் நல்ல விளைவுகளைக் கவனிக்கும் மற்ற மாநிலங்களும் இதிலிருந்து விலக்குப் பெறுவதற்கான வாய்ப்பு அமையும்.
15. தமிழ்நாட்டில் தி.மு.க. vs பா.ஜ.க. என்பது போன்ற தோற்றம் தற்போதைய தேர்தல் களத்தில் தெரிகிறது. இதனால் பா.ஜ.க. இங்கு மேலும் வளரத்தானே செய்யும்?
இது உண்மையல்ல, ஊடகங்களின் மூலமாக ஊதிப் பெருக்கப்படுகிறது. பிரதமர் அடிக்கடி வருவதால் அப்படித் தெரிகிறது.
16. பா.ஜ.க. மட்டுமே இம்முறை 370 இடங்களுக்கு மேல் கைப்பற்றும் என்று பிரதமர் மோடி பேசி வரும் நிலையில், இந்தியா கூட்டணி கட்சிகளுக்கு நாடு முழுவதும் குறைந்தபட்சம் இத்தனை இடங்களில் நிச்சயமாக வெற்றி கிடைக்கும் என்று உங்களால் உறுதியாக கூற முடியுமா?
பிரதமர் சொல்லும் அளவுக்கு அவர்களுக்கு இடங்கள் கிடைக்காது என்பதும், இந்திய ஒன்றியத்தை இந்தியா கூட்டணி ஆள்கின்ற அளவிற்கு வலிமையான வெற்றி கிடைக்கும் என்பதுமே உண்மை.
17. பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர் என்று கூறப்படுகிறது. இது உங்கள் தேர்தல் வெற்றியை பாதிக்காதா? இதனை எவ்வாறு சமாளிக்கப் போகிறீர்கள்?
சட்டமன்றத் தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தையும் படிப்படியாக நிறைவேற்றுவேன் என உத்தரவாதம் அளித்திருக்கிறேன். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் ஆட்சி சக்கரத்தை இயக்கக்கூடியவர்கள். அவர்கள் இந்த அரசு எந்தளவு நிதி நெருக்கடியில் இருந்து மெதுவாக மீண்டு வருகிறது என்பதை அறிவார்கள். மூன்றாண்டுகளுக்கு முன் இருந்த நிதி நெருக்கடியிலிருந்து மெல்ல மீண்டதன் விளைவாக மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட திட்டங்கள் நிறைவேற்றப்பட்டதுபோல, நிதி நெருக்கடி இன்னும் சீராகும் போது மற்ற வாக்குறுதிகளும் நிச்சயம் நிறைவேற்றப்படும். ஒன்றிய அரசிலிருந்து தமிழ்நாட்டுக்குக் கிடைக்க வேண்டிய நிதி உரிய வகையில் கிடைக்கின்ற காலம் கனிய இருப்பதால் அரசு ஊழியர்கள் – ஆசிரியர்களின் கோரிக்கைகளும் நிறைவேறும் காலம் கனியும்!
18. இந்த முறை மக்களவைத் தேர்தல் வேட்பாளர் பட்டியலில் 11 புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதே. அதற்கு முக்கியக் காரணம் உள்ளதா? சில குறிப்பிட்ட சமூகத்துக்கு இடம் தரவில்லை என்கிறார்களே?
அனுபவம் கொண்ட மூத்தவர்களும், அறிமுகமாகும் இளைஞர்களும் இணைந்த வேட்பாளர் பட்டியலைத் தி.மு.கழகம் வெளியிட்டுள்ளது. அதுபோல அனைத்துச் சமுதாயத்தினருக்குமான பிரதிநிதித்துவத்திலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. நீங்கள் நன்றாகக் கவனித்துப் பார்த்தால், உங்கள் கேள்விக்கே இடமிருக்காது. சில தொகுதிகள் தோழமைக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டு, அவர்கள் அங்குள்ள சமுதாயத்தினருக்கு வாய்ப்பளிக்கும் சூழலும் ஏற்பட்டிருப்பதைக் காணலாம்.
19. தமிழ்நாட்டில் பரப்புரை மேற்கொண்ட பிரதமர் மோடி, நாங்கள் ஜெயித்து வந்தால் தி.மு.க.வே இருக்காது என்று கூறியுள்ளாரே. 3-ஆவது முறை பா.ஜ.க. ஆட்சி அமைந்தால் என்ன மாதிரியான நடவடிக்கைகள் இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?
மீண்டும் மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சி அமைந்தால் இந்தியாவில் ஜனநாயகம் இருக்காது. ஆனால், நிச்சயமாக அப்படியொரு நிலைமை இருக்காது. அதைத் தேர்தல் முடிவுகள் காட்டும்.
20. உதயசூரியன் சின்னத்தில் உயிரே போனாலும் நிற்கமாட்டேன் என்று துரை வைகோ பேசியுள்ளார். தி.மு.க. சார்பில் அவருக்கு உதயசூரியன் சின்னத்தில் நிற்கவேண்டும் என்று அழுத்தம் தரப்பட்டதா?
தனிச்சின்னத்தில் நிற்பதாகவே தொகுதிப் பங்கீட்டின் போதும் ம.தி.மு.க. சார்பில் தெரிவிக்கப்பட்டது. ‘தீப்பெட்டி’ சின்னத்தில் துரை வைகோ நிற்கிறார். எனவே, தி.மு.க. எந்த அழுத்தமும் தரவில்லை என்பதை நீங்கள் அறியலாம்.